எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

      விழியால், விழியுறு பிறழ்வால், விதுநிகர்
            நுதலால், நுதலுறு சிலையான், மென்
      மொழியான், மொழியுறு சுவையான், முழுநல
            முலையான், முலையுறு பொலிவாற், பல்
      வழியாற் கணிகைய ருறவால் வலிகெட
            அயர்வேன் இனிமருண் மரு வாமே
      ஒழியா நலனுற ஒருமா நிழலுடை
            ஒளியார் சடையவர் அருள் வாரே.                (59)

(இ-ள்.) விழியால் - கண்களின் நோக்கினாலும், விழி - அக் கண்கள், உறு பிறழ்வால் - (இரு பக்கமும்), உற்றுப் புடை பெயர்தலாலும், விது நிகர் - பிறைத் திங்களைப்போன்ற, நுதலால் - நெற்றியாலும், நுதலுறு சிலையான் - நெற்றியில் பொருந்திய வில்போன்ற புருவங்களாலும், மென் மொழியால் - மெல்லிய மொழியாலும், மொழி உறு சுவையால் - மொழிதலுறுஞ் சுவையாலும், முழு நலம் முலையான் - முழுநலத்தையுடைய முலையாலும், முலையுறு பொலிவால் - அம்முலை நலம் உற்றுப் பருத்து மார்பிடங்கொண்டு நெருக்கமாகப் பொருந்திய துணைமுலைகளின் இளமை வனப்பின் விளக்கத்தாலும், பல் வழியால் - சூதாட்டம் முதலிய பல வழிகளாலும், நேரும் கணிகையர் உறவால் - நேர்கின்ற பொருட்பெண்டிரது உறவாலும், வலி கெட - உடலின் வலிமையும் நெஞ்சின் வலிமையும் கெட, அயர்வேன் - மயங்குவேனாகிய யான், இனி மருள் மருவாமே - இனி மயக்கமடையாமல்; ஒழியா நலன் உற - நீங்காத அருட்பேறு அடையும்படி, ஒரு மா நிழலுடை ஒளியார் - ஒப்பற்ற மாநிழலை உடைய ஒளிப்பிழம்பராகிய, சடையவர் - சடையை உடைய ஏகாம்பரநாதர், அருள்வாரே - அருள் செய்வாரோ.

விழியால் - கண்களின் நோக்கினால்; (விழி, கருவியாகு பெயர்.)

நுதலுறு சிலை - சிலை, வில், புருவம்; உவமையாகு பெயர்.

‘பல் வழி’ என்றது, சூதாட்டம் முதலியவற்றை.

மென்மொழி, என்புழி மென்மை இனிமைமேற்று.

வலி என்பதற்கு, உடலின் வலி, நெஞ்சின் வலி எனக் கூறிக் கொள்க.

மருவாமே - மே எதிர்மறை வினை எச்ச விகுதி.

ஒளியார் - ஒளிவண்ணர்.

பற்பல தீய வழிகளால் கெட்டொழிந்த என்னை ஆட்கொண்டு அருளுதல் தக்க தன்றேனும், அருளே வடிவமாக இருப்பவர் அருளுவர் என்பது குறிப்பு.