| அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்  
 
  
 
 | துன்னிமித்தங் 
 கண்டுமஞ்சா தொருதுணையும் பிணையாதுதுனைந்து சென்று
 பொன்னிமித்தஞ் 
 சிலைசுமந்து முறுவலித்துப் புரமெரித்த
 புரைதீர் எந்தாய்!
 என்னிமித்தம் 
 என்னகத்தே குடிபுகுந்தாய் திருக்கச்சி
 இறைவா! ஏழை
 தன்னிமித்தந் 
 திருவுள்ளங் கனிந்ததன்றித் தகுதிமற்றென்
 தருக்கி னேற்கே.          63)
 |  (இ-ள்.) 
 துன் னிமித்தங் கண்டும் - கெட்ட சகுனம் நேரிடப் பார்த்தபொழுதும், அஞ்சாது - பயப்படாது, 
 ஒரு துணையும் பிணையாது - ஒருவரையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளாமலும், துனைந்து சென்று 
 - விரைந்து போய், பொன் நிமித்தஞ் சிலை - பொன்னால் ஆகிய மேருமலையை, சுமந்து 
 - வில்லாகத் தாங்கியும், முறு வலித்து - (அவ் வில்லை வளைக்காமலேயே) வெறும் புன்சிரிப்புச் 
 செய்து, புர மெரித்த - (அச்சிரிப்பிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால்) திரிபுரத்தை 
 அழித்த, புரைதீர் - (திரிபுரத்தாரால் மக்களுக்கு ஏற்பட்ட) துன்பத்தைத் தீர்த்த, 
 எந்தாய் - என் தந்தையே, என்னிமித்தம் - என்னிடத்துக் கண்ட எத்தகுதி காரணமாக, 
 என் அகத்தே குடி புகுந்தாய் - என் மனத்திலே குடியேறினாயோ (அறியேன்), திருக்கச்சி 
 இறைவா - திருக்கச்சியில் எழுந்தருளிய இறைவனே!, ஏழைதன் நிமித்தம் - ஏழை எளியேனாகிய 
 என்பொருட்டு, திரு உள்ளம் கனிந்ததன்றி - (நீயே ஒன்றும் எதிர்பாராமல்) திருவுள்ளம் 
 உருகி அன்பு பாராட்டினதல்லாமல், தருக்கினேற்கு - (உன் அன்பைப் பெற்றதால் உற்ற) 
 செருக்கை உடைய எனக்கு, தகுதி மற்றென் - உன் அன்பைப் பெறுதற்குரிய தகுதி எளியேனிடத்துண்டான 
 எளிமையேயன்றி வேறு என்ன உண்டு! (இறைவன் அன்பைப் பெறுதற்கு அவன்பால் காட்டும் பணிவுடைமையாலாகும் 
 எளிமையே யன்றி வேறில்லை  என்றபடி.)  துர்நிமித்தம் - சிவபிரான் திரிபுரம் எரிக்கத் தேரில் 
 அடியிட்டு ஏறினபோது, அத்தேர் அச்சு முறிந்து வீழ்ந்தது.  (அவ்விடம் அச்சிறு பாக்கம், 
 அச்சிறபாக்கம், அச்சிரவாக்கம் என வழங்குகிறது.) பொன்னிமித்தமாக மலையைச் சுமந்து என்பது சொற் போக்குரை. 
 (பொன் நிமித்தம் - பொன்னாகிய கூலி பெறும் பொருட்டு). எந்தாய் - எந்தை என்பதன் விளி; எந்தை என்பது என் 
 தந்தை என்பதன் மரூஉ.  என் தாய் என்றதன் மரூஉ எனினும் அமையும். “தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும், அச்சு முறிந்ததென்றுந்தீ 
 பற, அழிந்தன முப்புர முந்தீ பற” (திருவாசகம், திருவுந்தியார் 3). புரமெரித்த எந்தாய்; புரை தீ ரெந்தாய் எனத் தனியே 
 கூட்டுக. தீ ரெந்தாய் என்பது பிறவினைப் பொருட்டாகிய வினைத்தொகை. |