அறுசீர் ஆசிரிய விருத்தம்

      தருக்குறு தெரிவையர் செருக்கிலே
            தளையிடு மவர்மொழி யுருக்கிலே
      மருக்கமழ் குழலணி சொருக்கிலே
            மனமிவ ரிளமுலை நெருக்கிலே
      பெருக்குறு விழைவமர் திருக்கினேன்
            பிசிதரு மறைமுதல் பிறையினோ
      டெருக்கணி கச்சியின் இறைவனார்
            இரங்குறு வகையெது புகல்வனே.                  (64)

(இ-ள்.) தருக்குறு - கண்டார் மயங்கிக் களிப்புறுதற்குக் காரணமான, தெரிவையர் - பெண்களது, செருக்கிலே - மயக்குந் தொழிலிலும், தளை யிடும் - கேட்டாரைப் பந்தப்படுத்துகின்ற, அவர் மொழி - அவர் மொழியின், உருக்கிலே - உருக்கத்திலும், மரு கமழ் - மணம் வீசுகின்ற, குழல் - கூந்தலினை, அணி சொருக்கிலே - அழகு தாக்கிச் சொருகும் சொருகிலும், மனம் - மனம், இவர் - சென்று சேருதற்குக் காரணமான, இளமுலை நெருக்கிலே - இளமை வாய்ந்த தனத்தின் நெருக்கத்திலும், பெருக்குறு - அதிகரித்த, விழை வமர் - ஆசை பொருந்திய, திருக்கினேன் - மாறுபாடுடைய யான், பிசி தரும் - அரும் பொருளைக் கொடுக்கின்ற, மறை முதல் - வேத முதல்வராகிய, பிறையினோடு - இளந் திங்களோடு, எருக்கு அணி - எருக்க மாலையை அணிந்த, கச்சியின் இறைவனார் - கச்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதனார், இரங்குறு வகை - மாறுபாடுற்ற என்பால் இரக்கம் உற்ற வகை, எது புகல்வன் - யாதென்று கூறுவேன்!

பிசி - அரும் பொருள். பொருளை உவமைப்பொருளாற் கூறுவது. பிசி தரும் முதல் (முதற் பொருள்) பிசிதரும் மறை.

எருக்கு - எருக்கமாலை ஆகுபெயர்.

பெண்கள் மயக்கிலேயே விருப்புற்றுத் திரிந்த என்பால் கச்சிப்பெருமானார் இரக்கங் கொள்ளுதற்கு உற்ற வகை இன்னதென்று புகலவல்லேன் அல்லேன்; என்போன்றவரிடத்தும் இரக்கமுற்ற அவனுடைய அருளின் பெருமை என்னே!’ என்று வியந்து கூறுகின்றார் ஆசிரியர்.

“தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
               சிற்றிடையிலே நடையிலே
           சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
               சிறுபிறைநுதற் கீற்றிலே
      பொட்டிலே யவர்கட்டு பட்டிலே புனைகந்த
               பொடியிலே அடியிலேமேல்
           பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
               புந்திதனை நுழையவிட்டு
      நெட்டிலே யலையாமல் அறிவிலே பொறையிலே
               நின்னடியர் கூட்டத்திலே
           நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
               நேயத்திலே உனிருதாள்
      மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ?
               வளமருவு தேவையரசே ... ...”

எனத் தாயுமானாரும் இக் கருத்துப்படக் கூறியிருத்தல் காணலாம்.