|   மடக்கு எண்சீர் 
 ஆசிரிய விருத்தம்  
 
  
 
 | மாதரையிற் றருநறும்பூ விரைவிடுக்குங் 
 காலம்மதன்சினந்து மங்கையரை விரைவிடுக்குங் காலம்
 காதமணங் கமழ்சோலை பண்புணருங் காலம்
 கணவரிளங் கோதையர் தம் பண்புணருங் காலம்
 சீதமுறு கழைக்கரும்பின் கண்டழைக்குங் காலம்
 சிற்றிடையார் தந்தலைவர்க் கண்டழைக்குங் காலம்
 கோதறுசங் கினம்பழனப் பங்கமுறுங் காலம்
 குலவுகச்சி யார்பிரியப் பங்கமுறுங் காலம்.               
   (67)
 |  (இ - ள்.)  
 மா தரையில் தரு - பெரிய நிலத்தில் உள்ள மரங்கள், நறும்பூ - நல்ல பூக்களால், விரை 
 விடுக்கும் காலம் - மணம் வீசும் காலம் (இக் காலமாகும்), மதன் சினந்து - மன் மதன் 
 வெகுண்டு, மங்கையரை - பெண்களை, விரைவு - விரைவில், இடுக்கும் - வருத்தும், காலம் 
 - காலம், காதம் மணம் கமழ் - காத தூரம் மணம் வீசுகின்ற, சோலை - சோலையில், 
 பண்புணருங் காலம் - வண்டுகள் பாடும் பண்கள் சேர்ந்துள்ள காலம், கணவர் - தலைவர், 
 இளங் கோதையர்தம் - இளம் பெண்களுடைய, பண்பு - இன்ப நிலைகளை, உணருங் காலம் - 
 தெரிந்து கொள்ளுங் காலம், சீத முறு - குளிர்ச்சி பொருந்திய, கழைக்கரும்பின் - 
 கழையாகிய கரும்பின், கண் - கணுக்கள், தழைக்குங் காலம் - செழிக்குங் காலம், சிற்றிடையார்-சிறிய 
 இடையை உடைய மாதர்கள், தம் தலைவர்க் கண்டு - தம் நாயகரைப் பார்த்து, அழைக்குங் 
 காலம் - கூப்பிடுங் காலம், கோது அறு - குற்றமற்ற, சங்கினம் - சங்குக் கூட்டங்கள், 
 பழனப் பங்கம் - வயல்களின் சேற்றில், உறுங் காலம் - அடையுங் காலம், குலவு கச்சியார் 
 விளங்குகின்ற காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், பிரிய - பிரிதலால், பங்கம் 
 உறுங் காலம் - (நான்) துன்பம் அடையுங் காலம். விரை - தேனுமாம். கழைக் கரும்பு - இருபெயரொட்டு; கழைக் கரும்பின் விசேடமுமாம். கண் - கணுக்கள்.  பழனம் - வயல். ‘காலம்’ என்ற சொற்களுக்குப் பின் ‘இக் காலமாகும்’ 
 எனக் கூட்டி யுரைக்க. ‘பழனப் பங்கமுறும் காலம்’ என்பதற்கு, பழனப் பக்கத்தில் 
 அழகாகச் சென்று அடையும் காலம் எனவும் பொருள் கூறலாம்.  (பழனம் + பங்கு + அம் + 
 உறும் + காலம்.) |