| 
 வஞ்சி 
 விருத்தம்  
 
  
 
 | உறுமன் 
 கச்சி யுத்தம! யான்துறவுங் கொள்ளேன்; 
 தூய்மையிலேன்;
 அறமும் புரியேன்; அமைவில்லேன்;
 பெறவுந் தகுமோ பேரின்பே.                      
 (68)
 |  
 (இ - ள்.)  
 உறுமன் - (இறுதிக் காலத்தும்) அழியாமல் நிலைபெற்ற, கச்சி உத்தம - காஞ்சியம்பதியில் எழுந்தருளிய உத்தமனே, யான் துறவுங் 
 கொள்ளேன் - நான் துறவற நிலையுங் கொள்ளேன், தூய்மை யிலேன் - துப்புரவான நிலைமையும் இல்லேன், அறமும் புரியேன் - 
 நன்மைகளையும் விரும்பிச் செய்யேன், அமைவு இல்லேன் - மன அடக்கம் இல்லேன் (இங்ஙனம் இருத்தலால்),பேரின்பு - 
 பேரின்பத்தைக் பெறவுந் தகுமோ - பெறுவதும் - தகுதியாகுமோ?  ஆகாதன்றே. தூய்மை - உடம்பின் தூய்மை முதலாயின. அமைவு - மன அமைவு. உறுமன் கச்சி: “ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே, மாறிலா திருந்திடும் வளங்கொள் 
 காஞ்சி” (கந்த புராணம்.) ‘பேரின்பு ஆகிய வீட்டினை அடைதற்கு நிலையாமை, துறவு, மெய்யுணர்வு, அவாவறுத்தல் 
 என்ற நான்கு வழிகள் இன்றியமையாதன.  அவற்றுள், ஒன்றேனும் இல்லாத நான், பேரின்பத்தினைப் பெறுவதும் தகுதியாகுமோ? ஆகாதன்றே! 
 அங்ஙன மாயினும் பேரின்பத்தினைத் தந்து என்னை யாண்ட உன் அருட்டிறம் இருந்தவாறு என்னே!’ என்று ஆசிரியர், கச்சி யெம்பெருமானுடைய 
 அருட்டிறத்தினை வியந்து கூறுந் திறன் நோக்கி யின்புறுதற் குரியது. ‘உறுமன் கச்சி உத்தம’ என்றதால், கச்சியில் எழுந்தருளியுள்ள சிறந்தோனாகிய இறைவ 
 னொருவனே நிலைபேறுடையன் என்பதும், ஏனைய வடிவெல்லாம் நிலையாமை யுடையன என்பதும் விளங்கின.  ‘மன்’ என்பதே நிலைபேற்றை விளக்குவதாக இருக்க, 
 ‘உறுமன்’ என்ற சிறப்பால், பதி, பசு, பாசம் என்னும் மூன்றனுள் மிகவும் நிலைபேறுடையதாக விளங்குவது பதி யொன்றுமே என்பது போதரும். ‘துறவும் கொள்ளேன்’ என்றதால், “மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக் கலுற்றார்க்கு 
 உடம்பு மிகை” யாதலால், நிலையாமை யுணர்வால் துறவு எய்தாமையும் கூறப்பட்டது. ‘தூய்மை யிலேன்’ என்றதால், நீரால் அமைவதாய புறந்தூய்மையும், வாய்மையான் காணப்படுவதாகிய அகந் 
 தூய்மையும் இல்லாமையால் மெய்யுணர்வு எய்தாமை உணர்த்தப்பட்டது. ‘அறமும் புரியேன்’ என்றதால், அவாவறுத்த லில்லாமை குறிக்கப்பட்டது. ‘அமை வில்லேன்’ என்றதால், இந்தத் தூய பெரிய நெறிகளால் வரும் அமைதித்தன்மை எய்தாமை பெறப்பட்டது. இவற்றிற்குப் பிறவாறும் பொருள் கூறலாம்.  ‘இவ்வெல்லாத் துணைகளும் இல்லாதிருந்தும் 
 பேரின்பம் பெறச் செய்தனையே! உன் அருட்டிறம் இருந்தவாறு என்னே!’ என்று ஆசிரியர் ஈடுபடுகின்றார் என்க.  
  
  
 
 | “அன்ப 
 ராகிமற் றருந்தவம் முயல்வார் 
       அயனும் மாலும்மற் றழல்உறு மெழுகாம் 
 என்ப ராய்நினை வாரெ னைப்பலர் 
       நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்”
  (திருவா. செத்திலாப். 4) என்பதும், “புற்று 
 மாய்மர மாய்ப்புனல் காலேஉண்டியாய் அண்ட வாணரும் பிறரும்
 வற்றி யாருநின் மலரடி காணா
 மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
 பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்”
 (திருவா. செத்திலாப். 2) என்பதும், “கெடுவேன் 
 கெடுமா கெடுகின்றேன்கேடி லாதாய் பழிகொண்டாய்
 படுவேன் படுவ தெல்லாம்நான்
 பட்டால் பின்னைப் பயனென்னே
 கொடுமா நரகத் தழுந்தாமே
 காத்தாட் கொள்ளுங் குருமணியே
 நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
 நன்றோ எங்கள் நாயகமே.”
 (திருவா. ஆனந்தமாலை 4) |  என்பதும் இக் கலம்பகப் பாடலின் பொருளுணர்த்தும் கருவிகளாகக் 
 கொள்க. |