| 
 எண்சீர் 
 ஆசிரிய விருத்தம்<  
  
 
 | படவரவம் 
 அரைக்கசைத்த பரமர் வாழும்பதிக்கச்சி 
 மேயவிளம் பாவை கொங்கை
 தடவரையே கரிக்கொம்பே 
 சகோர மேமாந்
 தளிர்மேனி 
 தமனியத்தின் ஒளியே கண்கள்
 விடவடிவே ஆசுகமே 
 வேலே சேலே
 மென்மருங்குல் 
 முயற்கோடே விழைந்தேன் நெஞ்சஞ்
 சுடவகைதேர் 
 புருவமதன் சிலையே துண்டஞ்
 சுடர்க்குடையே 
 சுந்தரிகந் தருவ மானே.                 (74)
 |  (இ 
 - ள்.) பட வரவம் - படத்தை உடைய பாம்பினை, அரைக்கு அசைத்த 
 - அரையில் கச்சாகக் கட்டிய, பரமர் வாழும் - ஏகாம்பரநாதர் வாழுகின்ற, பதிக் கச்சி 
 மேய - பதியாகிய காஞ்சியில் விரும்பித் தங்கிய, இளம் பாவை - இளமை வாய்ந்த பாவை 
 போல்வாளாகிய தலைவியினது, கொங்கை - முலைகள், தட வரையே - பெரிய மலையும், கரிக் 
 கொம்பே - யானையினது கொம்பும், சகோரமே - நிலாமுகிப் புள்ளுமாம், மாந்தளிர் மேனி 
 - மாந்தளிர் போன்ற உடலின் நிறம், தமனியத்தின் ஒளியே - பொன் ஒளியின் நிறமாம், 
 கண்கள் - கண்கள், விட வடிவே - நச்சுத்தன்மை வாய்ந்த வடிவமும், ஆ சுகமே - அம்பும், 
 வேலே - வேலும், சேலே - சேல் கெண்டையும் ஆம், மென் மருங்குல் - மெல்லிய இடை, முயற் 
 கோடே - முயலின் கொம்பாம், (இல்லையென்று சொல்லும்படி இருப்பது), விழைந்தேன் - 
 அத் தலைவியை விரும்பினேனது, நெஞ்சஞ் சுட - மனம் சுடும்படி, வகை தேர் புருவம்-அவ் 
 வகையைத் தேர்ந்த புருவம், மதன் சிலையே - மன்மதனது வில்லாம், துண்டம் - அத் தலைவியின் 
 முகம், சுடர்க் குடையே - மன்மதனது திங்களாகிய குடையாம், சுந்தரி - அந்தப் பெண், 
 கந்தருவ மானே - கந்தருவப் பெண்ணேயாம். தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயலிடங் கூறுவதாக 
 இப்பாடல் அமைந்துள்ளது. பெண் கந்தருவமானாகவும், அவள் கொங்கை வரை, கொம்பு, சகோரமாகவும், மேனி தமனியத்தின் 
 ஒளியாகவும், கண்கள் விடம், அம்பு, வேல், சேல் ஆகவும், மருங்குல் முயற்கோடாகவும், 
 புருவம் மதன் சிலையாகவும், துண்டம் (முகம்) திங்களாகிய குடையாகவும் உருவகம் செய்யப்பெற்றுள்ளன. விழைந்தேன் நெஞ்சம் சுட வகை தேர்ந்த புருவம் - விழைந்தேனது 
 நெஞ்சத்தை சுடும்படி விதவிதமாக ஆராய்ந்த புருவம் எனினும் அமையும். அரைக்கு அசைத்த என்பது அரையில் அசைத்த எனப் பொருள் 
 படுவதால் வேற்றுமை மயக்கமாம். வரையே, கொம்பே, சகோரமே, ஒளியே முதலிய இடங்களில் 
 வந்துள்ள ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. அசைத்தல் - கட்டுதல்; ‘விட வேறு பட நாகம் 
 அரைக்கசைத்து’ என்று வரும் தேவார அடியும் நோக்குக. |