|   இரங்கல் பதினான்கு 
 சீர்கொண்ட ஆசிரியச் சந்த விருத்தம்.  
  
 
 |       எய்த வம்பு தைக்கு முன்னமற்றொர் பகழி தொட்டுவேள்
 ஏழை யங்க நைந்து தேய
 அப்பு மாரி பொழிகிறான்
 செய்த வம்பு ரிந்தி லாதெ
 னுய்யு மாறு முண்டுகொல்?
 திகழு மாட மதியு ரிஞ்சு
 கச்சி மேய செம்மலார்
 கைத வங்க 
 ணங்கி யான்மன்
 மதனை வென்ற காதையென்
 காத னோக்கி 
 யின்ப ளிக்க
 நேர்வ ரல்ல ரேலனை
 வைத வம்பு 
 நோக்கி யேனு
 மனமு வக்க வந்திலர்
 மாதர் 
 நோவ வெய்து செல்வ
 மென்ன வர்க்கு மங்கையே.                 (76)
 |  (இ - ள்.) 
 மங்கையே - தோழியே, எய்த அம்பு - தான் எய்த அம்பு, தைக்கும் முன்னம் - தைப்பதற்கும் 
 முன்பே, மற்று ஓர் பகழி, வேறோர் அம்பினை, தொட்டு - தன் கரும்பு வில்லில் தொடுத்து, 
 வேள் - மன்மதன், ஏழை அங்கம் - ஏழையாகிய எனது உடல், நைந்து தேய - சிதைந்து அழியும்படி, 
 அம்பு மாரி பொழிகிறான் - அம்பு மழையைச் சொரிகின்றான், செய் தவம் - சிவபெருமானாரைக் 
 கூடியிருத்தலால் அவன் அம்பினின்றும் பிழைத்து நிற்றற்குச் செய்யவேண்டிய தவத்தை, 
 புரிந்திலா தென் - விரும்பிச் செய்யாத யான், உய்யுமாறு - அம் (மன்மதன் விளைக்கும் 
 துன்பத்தினின்று) பிழைக்கும் திறம், உண்டு கொல்-உண்டோ, திகழ் மாடம் - விளங்குகின்ற 
 மாடங்கள், மதியுரிஞ்சு - சந்திரன் தங்கள்பால் உராய்ந்து தன் தினவு தீர்த்துக் 
 கொள்ளும்படி உயர்ந்த இடமாகிய, கச்சி மேய - கச்சியம்பதியில் எழுந்தருளிய, செம்மலார் 
 - சிறப்புடையாராகிய சிவபெருமானார், கண் அங்கியான் - நெற்றிக் கண்ணின் நெருப்பால், 
 மன்மதனை வென்ற காதை - மன்மதனை எரித்து வெற்றி கொண்டார் என்று கூறும் வரலாறு (மன்மதனை 
 வென்றதாகச் சொல்லப்படும் கதைதான்), கைதவம் - பொய்யாகக் கட்டிச் சொன்னதே 
 யன்றி வேறில்லை, என் காத னோக்கி - எனது காதலை அறிந்து, இன் பளிக்க - இன்பத்தைக் 
 கொடுக்க, நேர்வர் அல்லரேல் - உடன்பட்டு எதிர்ப்படாவிடினும், அனை - என் தாயானவள், 
 வைத வம்பு நோக்கி யேனும் - திட்டிய பழிச்சொற்களை நோக்கி என்பால் இரக்கங்கொண்டாயினும், மனம் உவக்க - என் மனம் 
 மகிழும்படி, வந்திலர் - வந்தாரில்லையே, மாதர் நோவ - உண்மைக் காதலுடைய மாதர்களின் 
 மனம் நோதலினால், அவர்க்கு-அத் தலைவர்க்கு, எய்து செல்வம் என் - உண்டாகும் பொருள் 
 யாது? (நீ கூறுவாயாக.) “மன்மதன் என் உடல் சிதைய அம்புகளை எய்துகொண்டே 
 யிருத்தலால், அவன் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணால் எரியுண்டான் என்று கூறும் கதை 
 பொய்க் கதையாம். அம் மன்மதன் தலைவனைப் பிரியாதவள்மீது தன் அம்பினை விடுவதில்லை. 
 அங்ஙனம், சிவபெருமானாராகிய தலைவரைப் பிரியாது வாழும் தவத்தை நான் முன் பிறப்பில் 
 செய்தேனில்லை. ஆகவே, மன்மதன் என்னை, இங்ஙனம் தன் அம்பால் துன்புறுத்துகின்றான். 
 சிவபெருமானார் என் காதலை நன்கு அறிவார். ஒருவேளை என்பால் உண்மைக் காதலில்லை 
 என்று கண்டு வரவில்லை யெனினும் தமக்கு உரிமையான என்னைத் தாய் பழி மொழி கூறித் 
 தூற்றுதலை நோக்கியேனும் வருதல் வேண்டும். அப்படியும் வாராததால் தம்மை விரும்பும் 
 மாதருடைய மனத்தை நோக வைக்க வேண்டுமென்பதே அப்பெருமானார்க்கு இயல்பாம். அவ்வியல்பினால் 
 அவர்க்கு வரும் செல்வம் யாதோ?’ எனத் தலைவி வருந்துகின்றாள். அப்பு மாரி - சொற்போக்கிலே; நீர் மழை. முந்தியதற்கு ‘அம்பு’ என்பது, ‘அப்பு’ என வலித்தல் 
 விகாரம் பெற்றது. ‘அனை’ - ‘அன்னை’ என்பதன் இடைக்குறை. புரிந்திலாதென் - விரும்பிச் செய்யாத யான் என்ற 
 பொருள் தரும் தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்; ‘என்’ என்பது தன்மை ஒருமை விகுதி. அங்கி - ‘அக்கினி’ என்ற வடமொழியின் சிதைவு. கை தவம் - பொய். “கைதவங்களைச் சாத்திரம் சொல்லுமோ” 
 (கைவல். சந். 49,) |