| 
 நேரிசை 
 வெண்பா  
  
 
 | என்னபிழை 
 செய்தாலும் ஏழையே னுக்கிரங்குமன்னுபுகழ்க் கச்சியுறை வள்ளறான் 
 - துன்னுமயன்
 கம்மாள னீசன் கடையன் பொதுவனென்பேன்
 கைம்மாறென் செய்வனோ காண்.                         
 (77)
 |  (இ - ள்.)  
 மன்னு புகழ் - நிலையான புகழையுடைய, கச்சியுறை - காஞ்சியம்பதியில் கோயில்கொண்டு 
 எழுந்தருளி யிருக்கின்ற, தான் - சிவபெருமான், வள்ளல் - யார் எதனை எப்போது வேண்டினாலும் 
 அவர் அதனை அப்போதே பெறுமாறு அருளும் வள்ளல் என்று உயர்ந்தோர் கூறக் கேட்டேன், 
 (வள்ளல் தன்மையுடையவன் பிறர் தன்னைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தான் 
 என்பதனை அவனிடத்துக் காண வேண்டித்) துன்னும் மயன் - அவனைத் தச்ச வேலையில் நின்று 
 பழகிய தச்சன், கம்மாளன் - தட்டான், நீசன் - கீழ்மகன், கடையன் - இறுதியில் 
 வைக்கப்பெற்ற வேளாளன் (கடைசிச் சாதியினன்) பொதுவன் - இடையன், என்பேன் - என்று 
 இவ்வாறெல்லாம் இகழ்ந்துரைக்கலானேன், என்ன பிழை செய்தாலும்-இவ்வாறு என்ன தவற்றைச் 
 செய்தாலும் அத் தவற்றையெல்லாம் நோக்காது, ஏழையேனுக்கு இரங்கும் - அறிவில்லாத 
 என்பால் இரக்கங்கொண்டு என் மனக் கருத்தறிந்து எனக்கு அருள் புரிவானானான், கைம்மாறு 
 என் செய்வன் - அத்தகைய வள்ளலுக்கு நான் என்ன பதில் உதவி செய்யமாட்டுவேன்? ஓ, கரண் - அசை. சிவபெருமான் சிறந்த வள்ளல் தன்மை யுடையவன் ஆதலால், 
 வழிபடுமடியார் தம் மனக் கருத்தறிந்து அவர் ஏசினும் அருள் செய்வான் என்பது கருத்து.  
 “ஈசற்கு நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு” 
 என்றதை நோக்குக. இனி, ஓருரை:-மன்னு புகழ் - நிலையான புகழையுடைய, கச்சி 
 உறை - காஞ்சியம்பதியில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள, வள்ளல் தான் - வள்ளல் தன்மையுடைய சிவபெருமானே துன்னும் 
 - படைப்புத் தொழிலின்கண் பொருந்திய, அயன் - பிரமனுடைய, கம் ஆளன் - (அப்பிரமன் 
 செருக்குற்ற காலத்து அவன்) தலைகளுள் ஒன்றைக் கொய்து தன் கையில் ஏந்திக் கொண்டிருப்பவன், 
 ஈசன் - (அப் பிரமனுக்கு மட்டுமன்றித் திருமாலுக்கும்) தலைவனா யிருப்பவன், கடையன் 
 - அப் பிரமனும் அத் திருமாலும் அழிகின்ற கடையூழிக் காலத்தும் தான் மட்டும் அழிவின்றி 
 யிருப்பவன்; பொதுவன் - உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கருதாது பொதுவாக 
 யாவர்க்கும் அருள்புரியுமாறு பொதுவிடமான சிதம்பரத்தில் ஆநந்தக் கூத்தாடி அருள் செய்பவன், 
 என்பேன் - என்று கூறுவேன்; என்ன பிழை செய்தாலும் - அத்தகைய சிறப்புடையனாதலால், 
 அவன் தன் பெருமையொன்றையே கருதி, என் சிறுமை யொன்றையும் கருதாது, அறிவில்லாமையால் 
 நான் என்ன தவற்றினைச் செய்வேனானாலும், ஏழையேனுக்கு - அறிவில்லாத என்பால், இரங்கும் 
 - இரக்கங்கொண்டு அருள் செய்வான்; கைம்மாறு என் செய்வன் - அத்தகைய இறைவனுக்கு 
 நான் என்ன பதிலுதவி செய்ய மாட்டுவேன்? ஓ, காண் - அசைகள். ‘கம் ஆளன்’ என்பதற்குத் திருப்பாற்கடலை இடமாகக் 
 கொண்டு உறைபவனாகிய திருமால் என்று பொருள் கூறுதலுமாம்.  கம் - நீர் (கம்மிக்கு 
 உலவும் கலைசையே - கலைசைக். 92) இப் பொருளின்படி சிவபெருமான் அயனாகவும், திருமாலாகவும், 
 ஈசனாகவும் நின்று யுக முடிவில் நிலைபெறும் ஒருவனாகவும் பொதுவனாகவும் உள்ளவன் என்பேன் 
 என்று கருத்து வேறுபாடு காண்க.  ‘என்பேன்’ என்பதற்கு ‘என்று கூறப்பெறுவேன்’ என்று பொருள் 
 கொள்ளுதலும் ஒன்று.  உயர்ந்தோரால் இங்ஙனம் கூறப் பெற்றுளேன் என்பது கருத்து.  இப்பொருளில் 
 ‘என்பேன்’ என்ற செய்வினை, செயப்பாட்டுவினைப் பொருளில் நின்றது என்று கொள்ளுக. ஓ, காண் என்பனவற்றை அடையாக்காது, ஓ நீ இதனை யறிவாயாக 
 என்று பொருள் கூறுவாரும் உண்டு.  ஏழையேனுக்கு வேற்றுமை மயக்கம். “ஏசினும் யானுன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து 
 வேசறுவேனை விடுதி கண்டாய்” (திருவா. நீத். விண். 50.) ‘என்ன பிழை செய்தாலும்’ எனத் தொடங்கும் வள்ளற் 
 பெருமானார் பாடலினையும், “சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை” என்ற மணிமொழியாராகிய 
 பெருமானார் பாடலையும் கருத்தில் வைத்துக்கொண்டு பாடியிருக்கும் பாடல் இது வென்பதை 
 நோக்கி யறிக. |