|   சம்பிரதம் அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்  
  
 
 | காற்றைப் 
 பிடித்தொர்சிறு கரகத்துண் மூடுவேம்கனலைவா னோங்கவிடுவேம்
 சேற்றைப் பிசைந்துசில தேவரையும் 
 ஆக்குவேம்
 சீதரனை மாலாக்குவேம்
 ஆற்றைச் செலுத்தியரி யேறவைப் 
 பேமமுதை
 ஆவலுடன் வாரியுண்பேம்
 நீற்றைப் புனைந்தவர் திருக்கச்சி 
 போன்றதல
 நேர்தருஞ் சத்தியெமதே.                         
 (78)
 |  (எங்கள் சித்தின் பெருமையைக் 
 கூறுவேம் கேளுங்கள்) (இ - ள்.)  
 காற்றைப் பிடித்து - இடைவிடாது வீசும் காற்றைப் பிடித்து, ஓர் சிறு கரகத்துள் - ஒரு 
 சிறிய குடுவையினிடத்து அடைத்து, மூடுவேம் - மூடி விடுவேம், கனலை-நெருப்பினை, வான் ஓங்க 
 - வானில் உலவும்படி, விடுவேம் - அனுப்பிவிடுவேம், சேற்றைப் பிசைந்து - சேற்றினைப் 
 பிசைந்து எடுத்து, சில தேவரையும் ஆக்குவேம் - சில தேவரையும் செய்வேம், சீதரனை மாலாக்குவேம் 
 - திருமகளை மார்பிலே கொண்டு திகழும் திருமாலினை அத் திருமகளைக் கீழே விடாதபடி அவளிடத்து என்றும் 
 மையல் கொள்ளும்படி செய்வேம், ஆற்றைச் செலுத்தி-ஆற்று நீரைக் கால்வாய்களின் வழியே 
 செலுத்தி, அரி யேறவைப்பேம் - நெற்கதிர்களின் அரி வளம் பெற்று வளரும்படி செய்வேம், 
 அமுதை ஆவலுடன் வாரி யுண்பேம் - அமுதத்தை ஆசையுடன் கடலிடத்துக் கடைந்தெடுத்து உண்பேம், 
 நீற்றைப் புனைந்தவர் - விபூதியை அணிந்த ஏகாம்பரநாதரது, திருக்கச்சி போன்ற தலம்-திருக்கச்சியைப்போன்ற 
 ஒரு தலம், நேர் தரும் - எங்கள் முயற்சியால் உண்டானதேயாம், எமது சத்தியே-இவையெல்லாம் 
 எங்களுடைய சித்தின் (சம்பிரதத்தின்) ஆற்றலேயாம். சிறு கரகத்துள், காற்று இயற்கையிலேயே உள்ளது.  இவண் 
 அடைப்பது என்பது இல்லை.  எனினும், காற்று வீசாதபோது, கரகத்துள் அடைப்பட்டதாக வழங்குவர்.  
 நெருப்பு இயல்பாகவே வானோங்கி உயரும்;  நெருப்பு வண்ணமாய் ஞாயிறு (சூரியன்) வானில் 
 ஒளிர்கின்றான் என்பது இயற்கையே.  வானில் நெருப்பு வடிவினனான சூரியன் உலவுவது சித்தின் 
 ஆற்றலால் என்பர்.  சேற்றினைப் பிசைந்து கையினால் பிடியாகப் பிடித்துக் கடவுள் 
 வடிவமாக வைத்து வணங்குவது வழக்கமே. பிள்ளையார் சதுர்த்தியில் பிள்ளையாரும், பிற காலங்களில் 
 ஐயனார், முனீச்சுவரர் முதலியோரும் சேற்றினால் ஆய வடிவங்களில் வழிபடப் பெறுவதை 
 நோக்குக. திருமாலை இலக்குமியினிடத்து ஆசை உடையவராகவும், மால் 
 என்னும் பெயரை உடையவராகவும் செய்வோம் என இரட்டுற மொழிதலுமாம். ஆற்றைச் செலுத்தி யரி யேற வைப்பேம்.  கழனியில் 
 ஆற்று நீரால் விளைந்து நெற்கதிர் வளம் பெற்று வளர்வது இயற்கையே; ஆற்றைச் செலுத்திக் 
 குதிரை மரம் ஏற வைப்போம்.  அரி - வைக்கோலுமாம்.  ஆற்றை மதகு வழியாகச் செலுத்தி 
 நெல் அரிகளை அடித்துக்கொண்டு போகச் செய்வோம் என்றும் கூறலாம். அமுதை ஆவலுடன் வாரி யுண்பேம் - சோற்றினை ஆவலுடன் 
 அள்ளி உண்பேம் எனவும் பொருள் தரும். |