கொற்றியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆமைமீன் கோலமுறு மங்கமரீஇ அரவிடையால்
      அகடு மேவி
மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும்
      வகையாற் குல்லைத்
தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர் நீக்கியருள்
      தந்து காப்பீர்
கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு துளவமணக்
      கொற்றி யாரே.                         (82)

(இ - ள்.) கோமளை வாழ் - அழகிய உமாதேவி தங்கிய, இடத்தர் - இடப்பாகத்தை உடையவராகிய ஏகாம்பரநாதர் வாழ்கின்ற, கச்சி மறுகு உலவு - காஞ்சிபுரத்தின் வீதியில் உலவுகின்ற, துளவம் மணம் கொற்றியாரே - துளசி மாலையின் நறுமணம் வீசுகின்ற தாசிரிச்சியாரே, ஆமை மீன் கோலம் உறும் அங்கமரீஇ - ஆமைபோலும் புறவடியும் வரால் மீன்போலும் கணைக்காலும் அழகுறும் உறுப்புக்கள் கொண்டு, அரவு இடை ஆல் அகடு மேவி - பாம்புபோலும் துவளும் இடையும் ஆலிலை போலும் வயிறும் அமையப்பெற்று, மாமை யுருவோடு - மாவின் தளிர்நிறம் போலும் நிறத்தோடு, வளை சக்கு அரம் ஏந்தி - சங்கு வளையல்களும் அரம்போலும் கண்ணும் ஏந்திக்கொண்டு, திகழும் வகையால் - விளங்கும் காரணத்தால், ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ - எங்கள் சிவபெருமானார் அருளால் கூர்மம் மீன் பன்றி இவற்றின் வடிவம் உற்ற அருள் தோற்றத்தைப் பொருந்தி, அரவு இடை - பாம்பணையில், ஆல் அகடு மேவி - ஆலிலையின் மேலே பள்ளிகொண்டு, மாமை உருவோடு - கரு நிறத்தோடு, வளை சக்கரம் ஏந்தி-சங்குச் சக்கரம் ஏந்திக்கொண்டு, திகழும் - விளங்கும், குல்லைத் தாமனை ஒப்பீர் - துளசிமாலையை அணிந்த திருமாலினை ஒப்பீர், ஐந்து சரம் செய் துயர் - மன்மத னது ஐந்து பகழிகள் செய்கின்ற துன்பத்தை, நீக்கி - ஒழித்து, அருள்தந்து - அருள்செய்து, காப்பீர் - என்னைக் காக்கக் கடவீர்.

சக்கரம் - சக்கு அரம்; அரம் சக்கு - அரம் போன்ற கண். 

கொற்றியார் - தாசிரிச்சி.

ஆமை - புறந்தாளுக்கு உவமை (புறந்தாள் - பாதத்தின் மேற்பாகம்.)

மீன் -வரால் மீன் (கணைக்காலுக்கு உவமை.)

கோலம் - அழகு.

திருமால் - ஆமை, கூர்மம்.

மீன் - மச்சம்; கோலம் - பன்றி (வராகம்) அவதாரங்கள்.

அரவு இடை - பாம்பினை ஒத்த இடையையும்; ஆல் இடை மேவி - ஆலிலைபோன்ற வயிற்றையும் பொருந்தி.

திருமால்: அரவிடை - பாம்பினிடத்திலும், அரவணை ஆல் அகடு மேவி - ஆலிலை நடுவிலும் தூங்கி.

கொற்றியார்: மாமை யுருவோடு வளை சக்கர மேந்தி - மாமை நிறம் (பொன் நிறம்) பொருந்திய உடம்போடு வளையலையும், (சக்கு அரம் - அரம் போன்ற கண்ணையும் தாங்கி) (கங்கையும் சக்கரத்தையும்) கையிற்கொண்டு.

திருமால்:  மா - கரிய, மை உருவுடன் - மேகம்போன்ற மேனியுடன்-பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்தி.

‘காப்பீர்’ என்றது, திருமாலை நீர் ஒப்பவராதலின், எம்மைக் காத்தற்றொழில் உமக்கு எளிதாகும்.