| 
 கட்டளைக் 
 கலித்துறை  
  
 
 | மதுவிருந் தேயளி பாடுந் தொடைபுனை 
 மன்னருமிங்கெதுவிருந் தேனும் பெறுமின்ப மென்கச்சி ஈசனை வான்
 புதுவிருந் தேபுண்ட ரீகன் முராரி புரந்தரனைப்
 பொதுவிருந் தேவல் கொளும்பெரு மாவெனப் போற்றுவனே.     (84)
 |  (இ - ள்.) மது 
 இருந்தே - தேனை உண்டு அதிலிருந்தே, அளி பாடும் - வண்டுகள் பாடுகின்ற, தொடை புனை 
 - மாலையணிந்த, மன்னரும் - அரசர்களும், இங்கு - இவ்வுலகத்தில், எது இருந்தேனும் - 
 எவ்வளவு சிறந்த பொருள்கள் பெற்றிருந்தாலும், பெறும் இன்பம் என் - அடையக்கூடிய இன்பம் 
 யாது?  (துன்பமே என்றபடி) ஆதலால், கச்சி ஈசனை - காஞ்சியம் பதியில் எழுந்தருளிய 
 சிவபெருமானை, வான் புது விருந்தே (என) - தேவர்களுக்கு எப்பொழுதும் புதுமையாக இருக்கும் 
 புதியோனே என்றும், புண்டரீகன் - தாமரைப்பூவில் உறை பிரமனையும், முராரி - திருமாலையும், 
 புரந்தரனை - இந்திரனையும், பொது இருந்து - அவர்கட்கு நடு நிலைமையாக இருந்து (கனகசபையிலிருந்து), 
 ஏவல் கொளும் - பணிவிடை செய்ய ஏவிக் கொள்ளும், பெருமா என - பெருமானே என்று, போற்றுவன் - யான் 
 துதிப்பேன். அரசர் வாழ்வும் வாழ்வன்று என்று எண்ணிக் கச்சி எம்பெருமானைத் 
 துதிப்பேன் என்பது கருத்து. ‘பொதுவிருந்து ஏவர் கொள்ளும் பெருமா’ என்பதற்கு, மும்மூர்த்திகளுக்கும் 
 மேலாய்ப் பொதுநிலை வாய்ந்திருந்து, திருக் கூத்து நிகழ்த்தும் தில்லை அம்பலத்திலிருந்து 
 ஏவல் கொள்ளும் பெருமானே! என்க. தொடை - பூக்களால் தொடுக்கப்படுவது; மாலை. ‘என்’ என்பது, எவன் என்பதன் மரூஉ. விருந்து - சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை.  
 ‘விருந்தே புதுமை’ என்பது தொல்காப்பியம். ‘இருந்தேனும்’ என்பது, ‘இருந்ததேனும்’ என்பதன் விகாரம். |