முகப்பு
தொடக்கம்


தரவுகொச்சகக் கலிப்பா

எனக்கே துன தருளை யெண்ணுமியல் என்துயரம்
உனக்கே தெரியுமகக் குற்ற துயரமெலாம்
அனைக்கே தெரியுமக வாயுங்கொல் அன்னைசெயல்
கனக்கேதந் தீர்த்தருள்பூங் கச்சிநகர்க் கண்ணுதலே!       (86)

(இ - ள்.) கனம் கேதம் தீர்த்தருள் - மிகுந்த துக்கத்தை (அடியாரிடத்து) ஒழித்தருள்கின்ற, பூங் கச்சி நகர்க் கண்ணுதலே - அழகிய காஞ்சி நகரத்தில் எழுந்தருளிய நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானாரே, உனது அருளை - உமது கருணையை, எண்ணும் இயல் - எண்ணும் தகுதி; எனக்கு ஏது - எனக்கு ஏது (எனக்கு இல்லை என்றபடி), என் துயரம் உனக்கே தெரியும் - என் துயரம் உமக்கே தெரியும் (என்னை!) மகக்கு உற்ற துயர மெலாம் - பிள்ளைக்கு உற்ற துக்க மெல்லாம், அனைக்கே தெரியும் - பெற்றத் தாய்க்கே தெரியவரும், அன்னை செயல் மகவு ஆயுங்கொல் - அன்புடைய அன்னையின் செயல்களைப் பிள்ளை ஆராயுமோ?

‘கனக்கேதந் தீர்த்தருள்’ என்பது, கேதம் - துக்கம் (கேதம் கெடுத்தென்னை ஆண்டருளும், திருவாசகம், 43 - 9.)

‘மகவும் குழவும் இளமைப் பொருள’ (தொல். 29.) ‘மக’ என்பது இளமையை முதலில் உணர்த்தி, ஈண்டுப் பிள்ளையை உணர்த்திநின்றது.

‘அனை’ என்பது, ‘அன்னை’ என்பதன் இடைக்குறை.  ‘எது’ என்னும் வினா, ஈண்டு இன்மை குறித்துநின்றது.

‘மகக்கு உற்ற துயரமெல்லாம் அனைக்கே தெரியும், அன்னை செயல் மகவு ஆயுங்கொல்’ என்பது, பிறிது மொழிதல் என்னும் அணிபெற்று நின்றது.  மகப்போன்றவன் நான்; அன்னை போன்றவன் நீ; எனக்குற்ற துயரமெல்லாம் உனக்குத் தெரியும்; உன் அருட்செயலெல்லாம் ஆராயும் தகுதி எனக்கில்லை என்ற பொருளை அது தருதலால்.  இனி, இப்பாடம் முழுதும் உவமையணி பெற்று நின்றதாகக் கொள்ளலும் ஒன்று.


மேல்