| 
 கட்டளைக் 
 கலித்துறை  
  
 
 | கணங்கொண்ட 
 பாசத் தொடரறுத் துய்யுங்கருத்துடையீர்!
 மணங்கொண்ட தண்டலை சூழுந் திருக்கச்சி
 மாநகர்வாழ்
 நிணங்கொண்ட சூற்படை நின்மலன் 
 தாளை
 நிதந்தொழுவீர்
 பணங்கொண்ட பாம்பின் விடங்கொண்ட 
 கண்ணியர்
 பற்றஞ்சியே.                              
 (87)
 |  (இ - ள்.)  
 கணம் கொண்ட - கூட்டமாக உள்ள, பாசத் தொடர் அறுத்து - பாசமாகிய சங்கிலியை அறுத்து, 
 உய்யுங் கருத்துடையீர் - பிழைக்கும் எண்ணம் உடையவர்களே, மணங்கொண்ட - வாசனை வீசப்பெற்ற, 
 தண்டலை சூழ் - சோலை சூழ்ந்த, திருக்கச்சி மாநகர் வாழ் - அழகிய காஞ்சிமாநகரத்தில் 
 வாழ்கின்ற, நிணங் கொண்ட - கொழுப்புப் பூசப்பெற்ற, சூற் படை - சூலாயுதத்தை உடைய, நின்மலன் தாளை - நின்மலராகிய 
 ஏகாம்பரநாதரதுத் திருவடியை, பணங் கொண்ட - படத்தைக் கொண்ட, பாம்பின் - பாம்பினது, 
 விடம் கொண்ட - விடம் போன்ற, கண்ணியர் - கண்களை உடைய மாதரது, பற்று அஞ்சி-ஆசைக்குப் 
 பயந்து, நிதம் தொழுவீர் - நாள்தோறும் வணங்குவீர்களாக. ‘கருத்துடையீர்! கச்சிமாநகர்வாழ் நின்மலன் தாளைக் 
 கண்ணியரது பற்று அஞ்சியே நிதந் தொழுவீர்’ என முடிக்க. சூல்-சூலப்படை; சூலாயுதம்.  சூலம் என்பது அம் கடைக் 
 குறையாய், சூல் என நின்றது. |