| 
 அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்  
  
 
 | அதிக 
 மன்றெளி யேந்துயர் புரிந்திடும்அறக்கடை ஆயுங்கால்
 துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர்
 இதயவா லயத்தூடு
 குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு
 கூறுடைக் கோமானார்
 நதிகொள் வேணியர் நாடுவோர் 
 தமக்கமை
 நலத்தினைத் தெரிந்தாரே.                        
 (92)
 |  (இ - ள்.)  
 துதி கொள் ஏகம்ப வாணனார் - அடியார்களது துதியைக்கொண்ட திருவேகம்பத்தில் வாழ்பவராய 
 ஏகாம்பரநாதர், தூயவர் - அழுக்கற்றவரது, இதய ஆலயத் தூடு - மனமாகிய கோயிலினிடத்து, 
 குதி கொள் இன்புருவாயவர் - பெருகுதல் கொண்ட இன்பமே வடிவமாய் உள்ளவர், மாதொரு 
 கூறு உடைக் கோமானார் - உமையைத் தம் இடப்பக்கத்தே உடைய பெருமானார், நதி கொள் 
 வேணியர் - கங்கையைத் தாங்கியிருக்குஞ் சடை முடியை உடையவர், நாடுவோர் தமக்கு - 
 தம்மை நாடுபவர்க்கு, அமை நலத்தினை - அளித்தற்கு ஏற்ற நலத்தினை, தெரிந்தார் - 
 தெரிந்தவராதலால், எளியேம்-அவரை நாடுகின்ற எளியேம், புரிந்திடும் அறக் கடை - 
 செய்யும் தீவினைத் தொழிலை, ஆயுங்கால் - ஆராயுமிடத்து, துயர் அதிக மன்று - (அவர் 
 தெரிந்து தர யாம்) நுகரும் துயர் அதிகம் அன்று. எளியேம் என்பதால், ஆசிரியர் தம்மொடு முன்னிலையாரையும் 
 படர்க்கையாரையும் கூட்டிக்கொண்டு கூறுகிறார் என்க. இனி, ‘எளியேன்’ என ஒருமையிற் பன்மை வந்த மயக்கம் 
 என்பாரு முளர்.  குதி கொளல் - குடி கொள்ளல். தூயவரும் இன்புரு வாயவரும் கோமானாரும் வேணியரும் ஆகிய 
 ஏகம்பவாணனார் தம்மை நாடுபவருக்கு ஏற்ற நலத்தினைத் தெரிந்து அருள் செய்பவராதலால், 
 அவரை நாடுகின்ற எளியேம் புரிந்திடும் அறக்கடையை ஆராயுங்கால் எளியேம் அனுபவிக்கும் 
 துயர் அதிக மன்று.  ஆகவே, அவர் அருளுடையவரே. |