ஊர்

நேரிசை வெண்பா

தெரிந்தார் மலர்த்தடத்தின் தெண்ணீர் துலைக்கோல்
பரந்தாழுங் கச்சிப் பதியே - கரந்தாழ்வெண்
மாதங்கத் தானத்தன் வாரிசத்த னேடரிய
மாதங்கத் தானத்தன் வாழ்வு.                         (93)

(இ - ள்.)  தெரிந்து - (வண்டுகள் தேனை) ஆராய்ந்து, ஆர் -உண்ணுதற்கு இடமாகிய, மலர்த் தடத்தின் தெண்ணீர் - பூக்களை உடைய பொய்கையின் தெளிந்த நீர், துலைக் கோல் - ஏற்ற மரத்தின்கண், பரம் - பாரமாய், தாழும் - தாழ்ந்து ஓடும், கச்சிப் பதியே - கச்சிப் பதியே, கரம் தாழ் - தும்பிக்கை தொங்குகின்ற, வெண் மாதங்கத்தான் - வெள்ளை யானையை ஏறிச் செலுத்தும் இந்திரன், நத்தன் - சங்கேந்திய திருமால், வாரிசத்தன் - தாமரையில் இருக்கும் பிரமன், தேட அரிய மாது அங்கத்தான் - ஆகிய இவர் தேடுதற்கு அரிய உமையைத் தன் உடம்பின் (இடப்பாகத்தில்) கொண்டவனாகிய, அத்தன் - தலைவன், வாழ்வு - வாழுமிடமாம்.

நான்காம் அடி, மா - சிறந்த, தங்கத்தான் - பொன் மலையாகிய மேருவை (வில்லாக) உடையவன் எனினுமாம்.

துலைக்கோல் பாரந் தாழும் கச்சிப்பதி என்றமையால், நீர்வளமுடைய பதி எனக் குறிப்பிக்கலாயிற்று.

மற்ற வளம் குறிப்பிக்காமலே அமையும்.