ஓரொலி வெண்டுறை

வாழ்வளிக்குந் திருவிழியார் மறையளிக்கும் அருமொழியார்
            வணங்கி னோர் தந்
தாழ்வகற்று மலர்ப்பதத்தார் தளர்வகற்றும் ஐம்பதத்தார்
            தண்ணந் திங்கட்
போழ்வதியும் புரிசடையார் புகழ்க்கச்சி மேய
ஆழ்கருணை மாகடலை அடிபணிமின் கண்டீர்!                (94)

(இ - ள்.)  வாழ்வளிக்குந் திரு விழியார் - செல்வத்தை அளிக்கும் அருட் பார்வையை உடையார், மறை யளிக்கும் அரு மொழியர் - வேதத்தை அருளும் அருமையான சொற்களை உடையார், வணங்கினோர் தம்-தம்மை வணங்கினோரது, தாழ்வு அகற்றும் - கீழ்மையை அகற்றும், மலர்ப் பதத்தார் - தாமரை மலர்போன்ற திருவடியை உடையார், தளர் வகற்றும் - தம்மைப் பரவி வணங்குவோருடைய தளர்ச்சியை ஒழிக்கும், ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர், தண்ணந் திங்கட் போழ் - குளிர்ந்த பிறைச்சந்திரன், வதியும் - தங்கும், புரிசடையார் - முறுக்குண்டச் சடையையுடையார் (ஆகிய), புகழ்க்கச்சி மேய - புகழை உடைய கச்சியில் தங்கிய, ஆழ் கருணை மா கடலை - ஆழ்ந்து பெரியதானக் கருணைக் கடலாகிய ஏகாம்பரநாதருடைய, அடி பணிமின் - திருவடிகளை வணங்குங்கள், (வணங்கின், பிறவிப் பிணி ஒழியும்.)

கண்டீர் - முன்னிலை அசை.

ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர்.

ஐந்து இடங்களாவன:  பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பஞ்சபூதங்கள்.  இவை, முறையே காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, சீகாளத்தி, சிதம்பர மென்னும் திருப்பதிகள்.

இரத்தின சபை முதலிய ஐந்து சபைகளை உடையவர் எனினும் அமையும். 

ஐம்பதத்தர், ஐ + பதத்தர் எனப் பிரித்து, வியக்கத்தக்க பதத்தை யுடையவர் எனினும் ஆம்.

போழ் - பிளவு.

திங்கள் போழ் - சந்திரனுடைய கீற்று; ஆவது - பிறைச் சந்திரன்.