பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய
விருத்தம்.
கரத்தின் வளையுஞ் சுழிவளையுங்
கனிந்த மொழியாற் புனைவளையுங்
காலையு மணியு மேகலையுங்
கல்வி பயின்ற கலையறிவும்
புரத்தின் வனப்பு நூபுரமும்
புரைதீ ரகத்தின் வற்புரமும்
பொலன்றோ டணையும் பூவணையும்
புரியும் பணியும் பொற்பணியும்
வரத்தி னுதித்தா ளொழித்தாளம்
மடமா னுடலம் ஒழித்தாறும்
வளமா வடியீர்! உமைச்சரணா
மருவப் பெற்றா ளாதலினாற்
சிரத்தி னலைமான் வைத்தீர்! நுஞ்
செந்தா மரைத்தாட் கீழேனுஞ்
சேருந் திறத்தை யறிவாளே
சிறியாண் மதனை வென்றிடவே.
(95) |
(இ - ள்.) கரத்தின்
வளையும் - கையிலணிந்த வளையலும், சுழி வளையும் - சுழியைப் போலச் சுழிந்து நெஞ்சினைக் கவரும், கனிந்த மொழியால் - அன்பு முதிர்ந்தச் சொற்களால்,
புனை - சிறப்பித்துக் கூறுகின்ற, வளையும் - திருப்பித் திருப்பிப் பேசுதலும், கலையும் - ஆடையும், அணியும் மேகலையும் - அணிந்த மேகலாபரணமும்,
கல்வி பயின்ற கலை யறிவும் - கல்வி பயின்றதனால் உண்டான நூலறிவும், புரத்தின் வனப்பும் - உடலின் அழகும், நூபுரமும் - சிலம்பு என்னும் காலணியும்,
புரை தீர் - குற்றம் நீங்கிய, அகத்தின் - நெஞ்சின், வற்பு உரமும் - வலிய திடமும், பொன் தோடு அணையும் - பொன்னாற் செய்த தோடு என்னும்
அணி காதுகளில் பொருந்துதலும், பூ அணையும் - மலர்கள் சொரிந்து கிடக்கும் படுக்கையும், புரியும் பணியும் - செய்யும் தொழிலும், பொற் பணியும் -
பொன்னாற் செய்த அணிகலனும் (ஆகிய இவற்றை) வரத்தி னுதித்தாள் - வரத்தினால் பிறந்தவளாகிய என் மகள், ஒழித்தாள் - நீக்கிவிட்டாள், அம்மடமான் -
அந்த மென்மை வாய்ந்த பெண்ணின், உடலம் ஒழித்தாலும் - உடல் நீக்கினாலும், வள மா அடியீர் - வளம் பொருந்திய மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரே,
உமைச்சரணாக - உம்மை அடைக்கலமாக மருவப் பெற்றாள் - அடையப் பெற்றாள், ஆதலினால் - ஆகையால், சிரத்தின் அலைமான் வைத்தீர் -நீர்,தலையில் அலையை உடைய
கங்கையாகிய பெண்ணினை வைத்தீர், நும் செந்தாமரைத் தாட் கீழேனும் -நுமது செந்தாமரை போன்ற திருவடியின் கீழேயாயினும், சேரும் திறத்தை-அடையும் வகையை,
அறிவாளே - அறிவாளோ, (அங்ஙனமறிந்தால்) சிறியாள் - சிறியாளாகிய என் மகள், மதனை வென்றிட - மன்மதனை வென்றுவிடக் கடவள்.
வற்பு - வன்பு. வலித்தல் விகாரம் பெற்றது.
‘அணியும் மேகலை’ என்றவிடத்துக் கீழ் ‘பொற்பணி’ என்று கூறுதலால், அணி என்பதன் பெயரெச்சமாகக் கொள்ளுதல் பொருந்தும்.
வரத்தினால் பிறந்தவள்.
பொற்பணி - அழகுவாய்ந்த அணிகலன் எனினும் அமையும்.
அலை - சினையாகுபெயராய்க் கங்கையை உணர்த்திற்று.
வென்றிட - அகரவீற்று வியங்கோளாகக் கொள்ளுதலே யன்றி, வினையெச்சமாகக்கொண்டு வெல்ல அறிவளோ? அறிவளே
என்ற விடத்துள்ள ஏகாரம் எதிர்மறையோடு வினாவும் ஐயமுமாம்.
உடல் இவற்றை நீக்கினாலும் அவள் மனம் உம்மைப் பற்றுதலை ஒழிக்கவில்லை.
நீர் பெண்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைப்பவர் என்பார், ‘அலைமானைச் சிரத்தில் வைத்தீர்’ என்றார். அத்தகைய நீர்,
இவள் துன்புற விடுதல் ஆமோ என்பது இசையெச்சம்.
ஒரு தலைவியை இடப்பக்கத்தே வைத்துக்கொண்டும், மற்றொரு தலைவியைச் சடையில் வைத்துக்கொண்டும விளங்குகிற தலைவராகிய கச்சிப்பதியீர்! இந்தத் தலைவிக்கும்
நும் திருவடியாகிய கீழ்ப்பாகத்தை இடமாகத் தரக்கூடாதா என்று மிகவும் இரங்கியதாகும். |