(இ - ள்.)  மதனை வென்றவர் - மன்மதனை வென்றவர், நஞ்சம் ஆர்ந்தவர் - கடு உண்டவர், வலியர் - மனவலிமை உடையவர், முள்ளி முண்டகமே - முள்ளை உடையதாகிய தாமரையே, மகிழ்நர் வந்திலர் - மகிழ்நராகிய என் தலைவர் வந்தாரில்லை, மாலை தந்திலர் - தாம் அணிந்த மாலையும் தந்தாரில்லை, அகம் உள்ளியே - மனத்தில் அவர் வாராமையையே எண்ணி, துயர்வது உண்டு - துன்பப்படுவது உண்டு, கத மிகுந்து எழும் - சினம் என்பால் மிகுந்து எழும், அத்தி நீர்த் துறை - கடலின் நீர்த்துறையில், கம்புள் - சம்பங்கோழி, பெடை பிரிந்தில(து) - பெட்டைப் பறவையைப் பிரிந்திலது, நறை சொரிந்து - தேனைச் சொரிந்து, இலகு - விளங்குகின்ற, அம்பு - மதன் அம்பு, உள் - என் மனத்தில், கவலை கூர - கவலை மிக, உஞற்றி - செய்து, மேவுறும் - பொருந்தாநிற்கும், மதியின் - சந்திரனைப்போல வெண்மையாகிய, இயல் தரு முத்தமே - ஒளியை வீசுகின்ற முத்துக்களே, அவர் அரு முத்தம் தருவது என்று - அவர் அரிய முத்தம் தருதல் எப்பொழுது, மணி உயிர்த்து - முத்துக்களைச் சொரிந்து, இரை சங்கமே - ஒலிக்கின்ற சங்குகளே, இரவு ஒன்று - தலைவரைப் பிரிந்திருக்கும் ஓர் இரவும், பற்பல சங்கமே-பற்பலவாகிய சங்கம் என்னும் அளவாகத் தோன்றும், நிதி தருந் தவ வங்கமே - நிதியை மிகுதியாகத் தரும் நாவாயே!, இனி அடைவதும் - இனி யான் சேருவதும், தவ அங்கமே - தவத்தினர்க்கு உரிய வாடின உறுப்பேயாகும் (உடல் மெலிவேயாகும் ஆதலால், இனி), நெடியனுந் தொழும் - திருமாலும் வணங்குகின்ற, கம்பமே யுறை நிமலர் - திருவேகம்பத்திலே தங்கிய தூய்மையுடையவராகிய ஏகாம்பரநாதர், கம்பம் தீர்ப்பர் கொல் - எனது நடுக்கத்தைத் தீர்ப்பரோ (நானறியேன் என்றபடி.)

முண்டகம் முள்ளியே - முள்ளையுடையதாகிய நீர் முள்ளியே என்றும் பொருள் கொள்ளலாம்.

வலியர் - வாராமையை எண்ணி மனத்தில் துன்பப்படுவதுண்டு.  அப்படி இருந்தும்,

அம்மகிழ்நர் வந்திலர் - அம்மகிழ்நர் வந்திலர்.

மாலை தந்திலர் - மாலை தந்திலர்.

அவர் மதனை வென்றவராதலாலும்;  நஞ்சினை உண்டவராதலாலும்,

வலியர் - (வன்னெஞ்ச முடையவர்) மதனை வென்றவராதலின், என்மேல் விருப்பம் உண்டாகவில்லை.  என் துன்ப நிலையைக் கண்டாயினும் அவர் இரக்கங் கொள்ளலாம்.  ஆனால், நஞ்சோடு பழகியவராதலின், அவருக்கு இரக்கம் இலதாயிற்று.

அஃறிணைப் பொருள்களாகிய பறவைகளும், தாம் பிரிந்தால் பெண் பறவைகள் வருந்தும் என எண்ணி அவற்றைப் பிரியாமலிருக்க, அறிவே வடிவமாகிய அவர் என்னைப் பிரிந்திருப்பது தம்முடைய இயல்புக்கு ஏற்குமோ?

‘அவர் தருவது அரு முத்தம்’ என்பதற்கு: ‘அரு முத்தம்’ என்பது அரிய வீடுமாம் என்று பொருள் கோடலுமாம்.

‘சங்கம்’ என்பது, இலட்சங் கோடி (கோடி இலட்சம்).

கம்பம் - மனக் கலக்கமாம்.

இனித் துறந்து தவஞ்செய்யப் போவதுதான் முறை என்பது.

கொல், வினாப்பொருளது

கம்பமே - ஏ ஈற்றசை.

‘பிரிந்திலது’ என்பது ‘பிரிந்தில’ என விகாரமாயிற்று.