செவியறிவுறூஉம் மருட்பா
கம்பத்
திருந்துதவுங் கண்மணியைச் சிந்தித்து
நம்பத் திருந்துவீர் நானிலத்தீர்
- வெம்பும்
பிணியு மூப்பும் பீடழி பழியுந்
தணியா வறுமைத் தாழ்வுந் தீரும்
திருவருள் நமக்குச் சிவணத்
திருவன் அன்னோன் சற்குரு வாயே.
(97) |
(இ
- ள்.) கம்பத்து - திருவேகம்பத்தில், இருந்து-எழுந்தருளி இருந்து,
உதவும் கண்மணியை - அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றை அருளி உதவி செய்யும் ஏகாம்பரநாதராகிய
கண்மணியை, நானிலத்தீர் - பூமியில் உள்ளவர்களே!, சிந்தித்து - நினைவோடு (அவரே
பற்றுக்கோடென்று எண்ணி), நம்ப - விரும்பி யொழுக, திருந்துவீர் - பிறவிப்பிணி
நீங்கித் திருத்த மடைவீர்; (எங்ஙனமெனின்), வெம்பும் பிணியும்- வருத்துகின்ற நோயும்,
மூப்பும் - கிழத்தனமும், பீடு அழி பழியும் - குணப் பெருமைகளையெல்லாம் அழிக்கின்ற
பழியும், தணியா - நீங்காத, வறுமைத் தாழ்வும் - வறுமையால் உண்டாகின்ற இழிவும்,
தீரும் - உங்களை விட்டு நீங்கும்; (இவை தீர்தலேயன்றி), அன்னோன் - அச் சிவபெருமானார்,
சற்குருவாய் - உண்மையை அறிவுறுத்து மாசிரியராகி வந்து, திரு வருள் - தம்முடைய சிறந்த
அருள், நமக்கு சிவண-நம்மிடத்தில் பொருந்த, தருவன்-உண்மை அறிவுரை அருளுவார்; (மெய்யறம்
பொருந்திய மொழியால் உண்மை யுணர்வு எய்துதலால், பிறவிப்பிணி நீங்க, வீட்டின்பம்
பெறலாம்.)
பீடு - பெருமை. (பீடு கெழு செல்வ மரீஇய கண்ணே - பதிற்றுப்.
50: 26.)
சிவண - பொருந்த. சற்குரு - உண்மையை உபதேசிக்கும்
காரண குரு; காரண குருமணி.
“ஆடூஉ வறிசொல்......பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி”
(தொல். சொல். 2.) “தன்னோடு சிவணிய ஏனோர் சேறலும்” (தொல் பொருள். 27).
“ஐந்து கதியும் சிவணவே” (பாரதம், பத்தாம் போர், 20)
வாசகர் பொருட்டு வந்த குரு (ஞானாசிரியர்) மக்களுக்குச்
சிவதீட்சை முதலியன செய்கின்ற சுத்த சைவர்; காரிய குரு. சிறப்புப்பற்றிச் சிவபெருமானார்
கண்மணியாக உருவகம் செய்யப்பெற்றமையால் ‘கண்மணியே’ என்றார்.
நானிலம் - நான்கு நிலப் பகுதிகளாலாகிய உலகம். நான்கு
நிலமாவன: பாலை யொழிந்த குறிஞ்சி, முல்லை, நெய்தல் மருதம் என்பன.
“ |
மாயோன்
மேய காடுறை யுலகமும்
சேயோன்
மேய மைவரை யுலகமும்
வேந்தன்
மேய தீம்புனல் உலகமும்
வருணன்
மேய பெருமணல் உலகமும்
முல்லை
குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய
முறையாற் சொல்லவும் படுமே” |
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் நானிலம் இவை யென அறியலாம்.
பாலையொடு கூட்ட நிலப் பகுதிகள் ஐவகைப்படும்.
ஆயின், பாலையை நீக்கியது என்னையோவெனின், “முல்லையும்
குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர்
படிவம் கொள்ளும்” என இளங்கோவடிகள் கூறுவர் ஆதலின், குறிஞ்சி நிலப் பகுதிகளே சிதைந்து
பாலை யென்னும் பெயர் பெறுவன வன்றிப் பாலையெனத் தனிநிலம் ஒன்று இன்றாதலின், பாலையை
நீக்கி நிலப்பகுதிகள் நான்கென எண்ணப்பட்டன.
ஈண்டு, நான்கு நிலப் பகுதிகளால் ஆய உலகம் ‘நானிலம்’
எனப்பட்டது. ‘பண்புத்தொகை அன்மொழி’ என்க.
“நம்பும் மேவும் நசையா கும்மே” என்பது தொல். உரியியல்
சூத்திரமாதலின், ‘நம்ப’ என்பதற்கு, ‘விரும்பி யொழுக’ என்று பொருளுரைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இச்சொல் நம்பிக்கை கொள்ள என்ற பொருளில் வழங்கலாயிற்று. விருப்பத்தால்
நம்பிக்கை ஏற்படுவது இயற்கையேயாதலின், இங்ஙனம் திரிந்து வழங்கும் பொருளும் குற்றமற்றதேயாம்.
‘சற்குருவாய்’ என்பது உண்மையை அறிவால் ஊட்டும் குருவாய்
என்ற பொருள் தருவதாயினும், “ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே” ஆதலின், சிற்குருவாய்,
ஆநந்த குருவாய் எனக் கூட்டி, அறிவாநந்தங்களையும் உபதேசிக்கும் குருவாய் என உரைத்துக்கொள்க.
எனவே, ‘சச்சிதானந்த குருவாய்’ அச் சிவபெருமானார் வந்து ‘சச்சிதாநந்த’ மயமான தம்
உண்மை நிலையினை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவர் என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளமை
வெளிப்படை. ‘கு’ என்பது அறியாமை என்றும், ‘ரு’ என்பது ஒழிப்பது என்றும் பொருள்
படும். எனவே, அறியாமையை ஒழிப்பவன் எவனோ, அவனே ‘குரு’ என்னும் தொடர்ச்சொல்லால்
வழங்கற்குரியன். ஆன்மாக்கள் தங்களையும் தங்களை ஆண்டருளும் இறைவனையும் அறியாமையால்
பிறவிப் பிணியிலாழ்ந்து வருந்துகின்றனராதலின், அவ் வறியாமைகளைப் போக்கி யாட்கொள்ளும்
குருவாகி, ஆண்டவனே வருவன் என்ற நுட்பமான பொருளை ஆசிரியர் தெரிந்து கூறுவது பாராட்டத்தக்கது.
‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என மணிவாசகர் கூறுவதால்,
‘சற்குருவாய்த் திருவருள் சிவண நமக்குத் தருவன்’ என்ற உண்மை புலப்படும். ‘யான் பெற்ற
இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது சான்றோர் இயல்பாதலின், ஆசிரியர் ஏனையோரையும்
ஆண்டாண்டு உளப்படுத்தி ‘நமக்கு’ என்றும் ‘நம்மையும்’ என்றும் கூறிச் செல்லுதல் காணலாம்.
ஈண்டு ‘நமக்கு’ என்பது ‘நம்மிடத்தில்’ எனப் பொருள்படுவதால்
வேற்றுமை மயக்கம். |