களபமணி . . . . ளங்கின,
(இ-ள்.)
களபம் அணி - கலவைச் சாந்து அணிந்த, அம்பிகை - உமாதேவியினது, கனகதனம் - பொற்குடம்
போன்ற முலை, இன்புற - இன்பமடைய, தழுவி வரும் - தழுவுதலால் உண்டாகும், மங்கலச் சுவடால்
- அன்பும் பண்பும் பொருந்திய (முலைத்) தழும்பால், விளங்கின - காணப்பட்டன (புயங்கள்).
காமக்கண்ணியார் கம்பாநதியின் வெள்ளங்கண்டு அஞ்சி
ஏகம்ப முடையாரைத் தழுவியபோது முலைத்தழும்பும் வளையற்றழும்பும் அவர்பால் விளங்கின.
“துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல்
மடந்தை
துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே”
திருவா. அருட்பத்து: 5). |
கதிர்மதிய . . . . நின்றன,
(இ-ள்.)
கதிர்-சூரியன், மதியம்-திங்கள், அங்கி-அக்கினி ஆகிய, முக்கண்ணின்-தன் கண்களால்,
ஒளி தயங்கிட-ஒளி விளங்கவும், கடுவுடைய - நஞ்சுடைய, திண்-திண்ணிய, சினத்து - கோபத்தையுடைய,
அரவு ஆட - பாம்பு படமெடுத்து ஆடவும், நின்றன - நிலை பெற்றன (புயங்கள்).
கதிர் என்னும் சினைப்பெயர் சூரியனுக்குச் சினையாகு
பெயர்.
மதி என்பது அம் சாரியை பெற்று மதியம் என நின்றது.
அக்கினி என்பது அங்கி எனத் திரிந்து நின்றது.
சரமழைபொ . . . . வந்தன,
(இ-ள்)
சரம் மழை பொழிந்த - அம்பு மழை பொழிந்த, பற்குனன் - அருச்சுனனிடத்து, அருள் பொருந்திட
- அருள் வாய்க்க, பகைவர் கெடு - பகைவரை அழிக்கக்கூடிய, வன்படைக் கொடையால் -
வலிய படையினது கொடையால், (வில்லும் கணையும் பெறுதலில்) உவந்தன - மகிழ்ந்தன (புயங்கள்).
சமரபுரி . . . . தந்தன,
(இ-ள்)
சமரம் புரி - போர் செய்தற்கு இடமாகிய சமரபுரியில் எழுந்தருளிய, கந்தனை - முருகனை,
புலவர் உய்ய - தேவர்கள் பிழைக்கும்படி, மண்டு அமர்த் திறல் - நெருங்கிய போர்த்
தொழிலில் வல்லமையுடைய, அவுணர் - அசுரர்கள், பங்கம் உற்றிடுமாறு - புறங்கொடுத்து
அழியும்படி, தந்தன - கொடுத்தன.
சமரபுரிக் கந்தனை - திருப்போரூரில் எழுந்தருளிய முருகனை,
சமரபுரி - திருப்போரூர் (சென்னைக்கு 30 கல் தொலைவில் உள்ளது.)
கந்தனைத் தந்தன என முடிக்க.
புலவர் - தேவர். புலம் உடையவர் புலவர். புலமாவது அறிவு.
சததளம் . . . . ணிந்தன,
(இ-ள்)
சத தளம் - நூறு இதழ்கள், அலர்ந்த-விரிந்த, பொன் தவிசினில் - அழகிய தாமரையாகிய
இருக்கையில், இருந்த - தங்கிய, அச் சதுமுகன் - அந்த நான்கு திருமுகங்களையுடைய பிரமனது,
மறங்கெட - வலிகெட, தலை யோடு - தலையாகிய ஓட்டை, அணிந்தன - தரித்தன. சத தளம்
- நூறு இதழ். பொற் றவிசு - பொற்றாமரைப் பீடம் எனினுமாம். மறம் - வலிமை.
அநேக பிரமர்களுடைய தலை ஓட்டினைத் தொடுத்துப் புயங்களில் மாலையாகச் சிவபிரானார்
அணிந்தனர் என்க.
சலமிசைது . . . . ணங்கின,
(இ-ள்)
சலமிசை - திருப்பாற்கடலில், துயின்ற - அறிதுயில் அமர்ந்த, சக்கரதரன் - சக்கரப்
படையை உடைய திருமால், நலம் பெற - நன்மை அடையும்படி, தரும விடை - தரும இடப வடிவமாகவும்,
அம்பு-மேரு வில்லுக்கு அம்பாகவும், உற - அமைய, பரிவோடு-அன்போடு, இணங்கின-பொருந்தின.
சக்கரதரன் - திருமால். நன்மை பெற அம்பாகப் பொருந்தத்
தோள்கள் இணங்கின.
தருமவிடையின் அழகிய புறத்து (முதுகில்) கை வைத்து இணங்கின
எனினுமாம்.
இரவினவிர் . . . . மிஞ்சின,
(இ-ள்)
இரவின் அவிர் திங்களின் - இராக்காலத்தே விளங்குகின்ற சந்திரனைப்போல, செலும்
- (எங்கும்) பரவும், ஒளி பெறும் - ஒளியைப் பெற்ற, குழை - குழையை உடைய, கவுரியிடம்
- உமாதேவியிடம், அன்பின் உற்றிட - அன்பின் இடமாக (அன்பு காரணமாகப்) பொருந்துதலாலே,
ஆசை மிஞ்சின - ஆசை மிகப் பெற்றன (புயங்கள்.) செலும் - செல்லும். (எங்கும் பரவும்.)
செலும் திங்கள் எனினுமாம். குழை - காதணி. கவுரி-பொன்நிற முடையாள். கவுரியானவள்
தன் இடப்பக்கத்தே அன்பினோடு பொருந்துதலால் அவளிடம் ஆசை மிஞ்சின எனினுமாம்.
இரணியனு . . . . வென்றன,
(இ-ள்)
இரணியன் - பொன்னனைய வடிவுடையான், உரம் - மார்பை, தொலைத்து - அழித்து (பிளந்து),
எழு நர மடங்கலை - எழுகின்ற நரசிங்கமூர்த்தியை, சரபம் உருவம் தரித்து - சரபப் பறவையின்
வடிவு கொண்டு, அமராடி வென்றன - போர் செய்து அதன் செருக்கை அடக்கின (புயங்கள்).
சரபம் என்பது சிங்கத்தைக் கொல்ல வல்லதாகக் கூறப்படும்
எட்டுக் கால்களையுடைய பறவை.
இடபமிசை . . . . கொண்டன,
(இ-ள்)
இடபம் மிசை வந்து - எருதின்மீது தோன்றி, பொன்பதம்-தன் அழகிய திருவடியினிடத்து,
நசைகொள் - அன்புகொண்டுள்ள, அன்பருக்கு-அன்பராகிய அடியவர்கட்கு, உயர் பதவி தந்து-உயர்ந்த
பதவியாகிய முத்தியைக் கொடுத்து, இசைப்ப அரும் - சொல்லுதற்கு அரிய, ஓகை கொண்டன
- மகிழ்ச்சி கொண்டன (புயங்கள்).
ஓகை, உவகை என்பதன் மரூஉ. பதவியைத் தருதலால் தோள்
பூரித்தது என்க.
இனிமைதரு . . . . யங்களே,
(இ-ள்)
இனிமை தரு - இன்பத்தைத் தருகின்ற, கம்பம் உற்று - திருவேகம்பத்தில் அமர்ந்து,
அருள் அநகன் - அருள் செய்யும் குற்றமற்ற சிவனாரும், எந்தை-என் தந்தையாரும், நித்திய
நிமலன்்-ஒன்றும் குற்றமற்றுத் தூயவடிவனாய்த் திகழும் நித்திய நிமலருமாகிய, சுந்தரப்
பரனார் புயங்கள் - அழகிய பரனாருடைய புயங்கள். ஏ-அசை. அநகரும் எந்தையும் நிமலரும்
ஆகிய சுந்தரப் பரனாரது புயங்கள் என்க.
‘புயங்கள்’ என்னும் சொல்லை விஞ்சின, மகிழ்ந்தன,
அணைந்தன, நிமிர்ந்தன என்று நிரலே கூட்டுக.
|