| 
 அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்  
  
 
 | தொண்டர் 
 சிரத்தின் முடிக்கும்பூதொழுவார் 
 இதய நடிக்கும்பூ
 அண்டர் முடியிற் 
 றுலங்கும்பூ
 அருமா 
 மறையின் இலங்கும்பூ
 பண்டை வினைப்பற் 
 றழிக்கும்பூ
 பணிவார் 
 அல்லல் ஒழிக்கும்பூ
 தெண்டன் 
 இடுவோர்க் கருள்கச்சித்
 திருவே 
 கம்பர் பதப்பூவே.                     (100)
 |  (இ - ள்.)  
 தெண்டன் இடுவோர்க்கு - தம்மைக் கும்பிடும் அடியார்கட்கு, அருள் - அருளுகின்ற, கச்சித் 
 திரு ஏகம்பர் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய திருவேகம்பநாதரது, பதப் பூ - திருவடியாகிய 
 தாமரைப் பூவே, தொண்டர் சிரத்தின் முடிக்கும் பூ - அடியார்களின் தலையில் முடிக்கும் 
 பூவாகும், தொழுவார் இதயம் நடிக்கும் பூ - தம்மை வணங்குபவரது உள்ளத்தில் நடித்து மகிழ்ச்சித் 
 தேனைத் துளித்து இன்பத்தைச் செய்யும் பூவாகும், அண்டர் முடியில் - தேவர்களது முடியில், 
 துலங்கும் பூ - சூட்டப்பெற்று விளங்கும் பூவாகும், அருமா மறையின் - உணர்தற்கு அரிய 
 சிறந்த வேதத்தின் துணையால், இலங்கும் பூ - அகப்பட்டு விளங்கும் பூவாகும், பண்டை 
 வினைப் பற்று - பழைய தீவினைப்பற்றால் ஏற்படும் (தீ நாற்றத்தை) தீய எண்ணத்தை, 
 அழிக்கும் பூ - அழிக்கும் பூவாகும், பணிவார் - தம்மை வணங்குபவரது, அல்லல் - பிறப்பிறப்புத் 
 துன்பத்தை, ஒழிக்கும் பூ - ஒழித்து வீடளிக்கும் பூவாகும்; (ஆதலால்) அம் பூவினைத் 
 தலை முடியிலும் உள்ளத்திலும் நாவிலும் புனைந்து வீட்டின்பம் பெறுவீர்களாக. பூ - ஈண்டுத் தாமரைப்பூ. ‘பூவெனப் படுவது - பொறிவாழ் பூவே’ என்பதனால் ‘பூ’ 
 என்பது தாமரைப்பூவை உணர்த்திற்று. கலம்பகத்தை அந்தாதியாக மண்டலித்துப் பாட வேண்டுதல் 
 மரபாகலின், இந்த ஆசிரியர் ‘பூமேவு நான் முகனும்’ என்று தொடங்கி, இந்தச் செய்யுளில் 
 பதப்பூவே’ என்று முடித்தார். ‘பதப்பூவே’ என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலையும் தேற்றமும் 
 தரும் இடைநிலையாம். |