ii

இத்தொகுதியுள் கொங்கு மண்டல ஊர்த்தொகையும் தொடர்பு கருதிச்
சேர்க்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ அறுபது ஆண்டுகட்கு முன்னர் 1923ஆம் ஆண்டில்
திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள் மிக அரிதின் முயன்று கார்மேகக்
கவிஞரின் கொங்கு மண்டல சதகத்தை உரையுடன் வெளியிட்டார்கள்.
அந்நூலுடன் அவர்கள் கொங்கு மண்டல ஊர்த்தொகையையும்
தந்துள்ளார்கள். பெரும்புலவர் எழுமாத்தூர் திரு. வே.ரா.
தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்கள் 1971ஆம் ஆண்டில் உரைவிளக்கக்
குறிப்புகளுடன் வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகத்தை
வெளியிட்டுள்ளார்கள். பெரும்புலவர் அவர்கள் தொகுத்து வைத்த
சுவடிகளினின்றும் இப்பொழுது கம்பநாதசாமிகளின் கொங்கு மண்டல
சதகமும் கிடைத்துள்ளது. எனவே இவை அனைத்தையும் தொகுத்து ஒரு
பெருநூலாகப் பதிப்பித்தால் ஆய்வாளருக்குப் பெரிதும் பயன்படும் என்று
கருதி இப்பதிப்பை வெளியிடுகின்றோம்.

இத்தொகுப்பிற்குப் பல சான்றோர் பெருமக்கள் துணைநின்றார்கள்.
வாலசுந்தரக் கவிராயரின் சதகப் பாடல்களும் 1 முதல் 19 வரைக்குமான
பாடல்களுக்கு மேலும் விளக்கங்கள் தந்து உதவியவர் தவத்திரு சாந்தலிங்க
அடிகளார் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் ந.இரா. சென்னியப்பன்
அவர்கள்; இக்கரை போளுவாம்பட்டி. தமிழாசிரியர் புலவர் ஐ. இராமசாமி
அவர்கள் கம்பநாத சாமிகளின் நூலைச் சுவடியினின்றும் படியெடுத்து எழுதி
உதவினார். செல்வி. வே. செல்லாத்தாள், எம். ஏ., எம். பில். அவர்கள்
கார்மேகக் கவிஞரின் சதகநூல், ஊர்த்தொகை ஆகியவற்றைப் படியெடுத்து
உதவினார். இவை அனைத்தையும் தொகுத்து இப்பதிப்பினைப் பதிப்பித்தவர்
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் இ. சுந்தரமூர்த்தி
அவர்கள். இவர்கள் அனைவருக்கும் விழாக் குழுவினரின் நன்றி என்றும்
உரியதாகும்.

தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மணிவிழா நினைவாக
வெளியிடப்படும் இந்நூலினைத் தமிழ்கூறு நல்லுலகம் ஏற்றுப் போற்றும் என
நம்புகின்றோம்.

 திருப்பேரூர்
 22-2-1986

விழாக்குழுவினர்
 தவத்திரு சாந்தலிங்க
இராமசாமி அடிகளார்
மணிவிழாக் குழு