முகப்புதொடக்கம்
6 முக்கூடற் பள்ளு

புகார்க் காண்டத்தின் இறுதியில்;

"திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்"

என்றும்,

மதுரைக் காண்டத்தின் இறுதியில்;

"நேரத் தோன்றும் வரியும் குரவையும் "

என்றும்

வஞ்சிக் காண்டத்தின் இறுதியில்,

"வரியும் குரவையும் விரவிய கொள்கையின்"

என்றும் இப் பாடல்களின் பெருமை சிறப்பாகக் குறிப்பிக்கப்பெறுகின்றன.

ஐந்திணைக்கும் முத்தமிழும் விரவிக் கூறிய இளங்கோவடிகள், குறிஞ்சிநிலத்துப் பாடல்களின் இயல்பினைக் குன்றக் குரவையிலும், பாலை நிலத்துப் பாடல்களை வேட்டுவ வரியிலும்; முல்லைநிலத்துப் பாடல்களை ஆய்ச்சியர் குரவையிலும், மருத நிலத்துப் பாடல்களைக் கானல் வரியில் வருகின்ற காவிரி யாற்றைப்பற்றிய பாடல்களிலும், நெய்தல் நிலத்துப் பாடல்களைக் கானல்வரிப் பாடல்களிலும் குறிப்பிட்டு ஐந்திணைக்கும் உரிய வரிப்பாடல்களின் சிறப்பினை விளக்கியமை காண்க. இவ்வாறு வழிவழியாய் வழங்கி வந்த பாடல்களை யெல்லாம் பண்டையோரும் தொகுத்து வைக்கவில்லை, பிற்காலத்தவரும் காப்பாற்றவில்லை.

குறம், பள்ளு இவற்றின் கால இயல்பு

மூவேந்தர்களுடைய ஆட்சி மறைந்ததனால் தமிழ் உலகம் இருளில் இயங்கிக்கொண்டு நெடுங்காலம் தத்தளித்தது. பிற மொழிகள் வந்து பேயாட்டம் புரிந்து அலறிக்கொண்டு அல்லற் படுத்திக்கொண்டிருந்தன. தமிழ்ப்புலவர்களைப் புரக்குந் தலைவர்களும் அரசரும் அரியராயினார். பெருங் காவியந் தோன்றும் நிலைமையும் ஏற்படவில்லை. எனவே, பழைய இலக்கிய மரபுகள் மாறிச் சிற்றிலக்கியங்கள் தோன்றலாயின. அவற்றுட் பெரும்பாலான படிப்பாரும் பேணுவாரும் இல்லாமல் தாமாகவே மறைந்தன.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்