மதுரையில் எழுந்தருளியிருக்கின்ற அங்கயற்கண் அம்மை எனும் மீனாட்சி
அம்மை மீது 17-ஆம் நூற்றாண்டிற் சிறந்து விளங்கிய குமரகுருபர அடிகளால்
பாடப்பெற்றது, இப்பிள்ளைத் தமிழ். இவ் வடிகள் புள்ளிருக்கு வேளூராகிய
வைத்தீசுரன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் முத்துக் குமாரசுவாமி மீதும்
பிள்ளைக்கவி பாடியுள்ளார்கள். இவ்விரு பிள்ளைத்தமிழின் சொல் நயம்,
பொருள் நயம், தொடை நயம், தொடர் நயம் முதலியன தனித்தனி படித்து இன்புறும்
அன்பர்க்கு மேன்மேலும் அடிகள் நூல்களை முற்றும் படித்துச் சுவைத்து
மகிழ்வுறும் பேற்றைப் பெரிதும் அளிப்பன.
கடந்த
அரைநூற்றாண்டிற்கு மேலாக இப்பிள்ளைத்தமிழ்
புலமைத்தேர்ச்சி பெறும் முறையில் பயில்வோர்க்குப்
பாடப்புத்தகமாக இருந்த சிறப்புடையது. மதுரைத்
தமிழ்ச் சங்கத்தில் யான் பயின்று வருங்காலத்து
இப் பிள்ளைத்தமிழைக் காஞ்சிபுரம் வித்துவான்
இராமசாமி நாயுடு இயற்றிய விரிவுரையுடன் படித்துள்ளேன்.
அவ்வுரை நூலும் இற்றைநாள் எளிதிற் கிடைப்பதரிதாயிற்று.
சென்னைப்
பல்கலைக் கழகத்தார் அடிகளார் பிள்ளைத் தமிழ்
அருமை கருதி வித்துவான் முதனிலைத் தேர்வுச் செய்யுட்
பாடப் பகுதியில், ஒன்றாய் அமைத்து வருவது
குறிப்பிடத் தக்கது. இதனைச் சொற்பொருள்
உணர்ந்து தெளியும் வகைக்கு விளக்கவுரை இயற்றுமாறு
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.
வ. சுப்பையா பிள்ளை அவர்கள் என்னைப் பணித்தார்கள்.
அங்ஙனமே எனது பழைய உணர்வும் ஆசிரியத் தொழிலில்
அமைந்த அழுந்திய அறிவும் இதனை இயற்றுங் காலத்து
உதவி புரிந்தன. உரை வெளிவரா நூல்கட்கும் உரை
எழுதும் உண்மை ஆற்றலை உதவும் திருவருட்கு என்றும்
கடப்பாடு உடையேன்.
இதற்குமுன்
வெளியிட்ட பிள்ளைத்தமிழ் உரை நூலில் காணப்படும்
பருவ விளக்கமும், நூற்பாகுபாடும் ஆங்காங்கு கண்டு
தெளிதற்குரியன.
இவ்
வுரைநூல் எழுதுங்காலத்து அச்சிட்டு வெளியாயுள்ள
திருப்பானந்தாள் மடத்து வெளியீடும் வேறு சில
வெளியீடுகளும் ஒப்பு நோக்கித் தெளிவுப்படுத்த
உதவியாயின. மாணவர்க்கு ஆங்காங்கு இன்றியமையாது
வேண்டப்பெறும் இலக்கணக் குறிப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மூலபாடமும் செய்யும் நிலை பெயராத முறையில்
சந்தி பிரித்து எழுதப்பட்டுள்ளது.
கலை
வளர்க்கும் கடப்பாடுடைய ஆசிரியப் பெருமக்களும்
மாணவ நண்பர்களும் இவ்வுரையில் காணும் குணம்
கொண்டு போற்றுவாராக!
புலவரகம்,
நெல்லை 1-9-1995 |
} |
அன்புள்ள
பு. சி. புன்னைவனநாதன் |
|