நளவெண்பா

என, வெளித்தோன்றாது குறிப்பால் உணர்தற்கேற்ற தன்மையைத் தொழிலுவமமாகக் குறித்த திறப்பாடு, போற்றி மகிழ்தற்குரித்து. இதனால் மக்கள் உள்ளப் பாங்கினையும் அறியும் ஒண்மையாளராகவும் இலகுதலை நன்குணரலாம்.

பின்னரும் நளமன்னன்பாற் கலிமகன் சார்ந்து அவனைத் துன்புறுத்த இருக்கும் நிலைக்கு, அவன் சார்ந்த காட்சியை இறைவனது திருமந்திர மொழியை ஓதி, அவன்றன் அருள் பெறாத மாக்களிடத்துத் தீவினைத் துன்பங்கள் யாவும் சேர, அவைகளால் அவர் துன்புறுவதுபோல, நளன்பால் சேர்ந்தான் என்று கூறுவது மகிழற்பாலதாக அமைந்துள்ளமை காண்மின்:

‘நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரம் சேர்ந்தாற்போல்
......................சேர்ந்தான் கலி’ (கலிதொடர்: 33)

என்பதில் மக்களாய்ப் பிறந்தோர் யாவரும் இறைவனை வணங்குதல் வேண்டுமெனவும், அவ்வாறு வணங்குவோரிடத்துத் தீவினையணுகாது எனவும், அவர் நலத்தோடு என்றும் வாழ்வரெனவும் குறிப்பால் உணர, அரிய கருத்தையும் உள்ளடக்கிக் கூறி, மக்கள் மக்கட் பண்போடு வாழும் வழியையும் காட்டுகின்றார். இதில் தீவினை சேர்தலாகிய வினையுவமம் குறித்த அறிவின் நுட்பம் இன்புறற்பாலது.

இதன் பின்னரும் கலிமகன் நளமன்னனை விட்டு நீங்கிச்சென்ற நிலையை விளக்கப் போந்தகாலை, ஓர் அரிய உவமத்தை அதற்குக் காட்டித் தம் நன்றியறிவையும் புலப்படுத்துகின்றார்:

சந்திரன் சுவர்க்கி யென்னும் அரசன், அறிவும் திறனும் மிக்க ஆண்டகை; இவன் கற்றார்பால் வற்றா அன்புடையான்; நம் புகழேந்தியாரை ஆதரித்துப் போற்றிய புகழாளன்; இவனால் இந் நூல் தமிழுலகில் தோன்றிற்றென்றால் அவன் புகழுக்கு அளவு வரையுண்டோ? இத்தகைய புகழ்மிக்கானின் சிறப்பும் ஆற்றலும் மொழியருமை யறியும் மதுகையும், கலைப் பண்பாட்டு நீர்மையும், தம் நன்றியறியும் கடப்பாடுந் தோன்ற,

‘...........சந்திரன் சுவர்க்கி கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி’ (கலிநீங்கு: 48)

என, நளமன்னனைப் பற்றியிருந்த கலி நீங்கிய தன்மைக்குச் சந்திரன் சுவர்க்கியால் கொண்டாடிப் போற்றப் பெறுகின்ற புலவர்களின் பசிப்பிணி முதலிய துன்பங்கள் நீங்குவதுபோல நீங்கிற்