அருளாளர்களாக விளங்கிப் பக்தி இயக்கத்தைப் பார்முழுதும் பரப்பிய
ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகப் பெருந்தகை போன்ற அடியவர்
பெருமக்களால் தமிழகம் பக்திச் சுவையில் திளைத்தெழுந்தது. இவர்களைப் போன்றே ஆழ்வார்
பெருமக்களும், வைணவத்தை வளர்த்துப் புகழ் கொண்டனர். பின்னர் இடையீடுபட்டு இத்தகைய
அருட்பாக்கள் அருகிக் காணப்பட்டன. பிற்காலத்தே பட்டினத்தடிகள், தாயுமானார் போன்றோர்
குறிப்பிடத்தக்க பக்திச்சுவைப் பாடல்களைப் பாடிப் புகழ் கொண்டனர். 19-ஆம் நூற்றாண்டின்
இறுதிக் காலத்தே வள்ளல் இராமலிங்க அடிகளார் என்னும் ஓர் ஒளிப்பிழம்பு வடலூரில் தோன்றி
உலகுக்கே ஒளி செய்தது.
அவ்வொளியிடைத் தோன்றிய இறைமுறையீடுகள் ‘அருட்பா’
வென்னும் அரிய பெயரோடு ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. இவை அவர்கள் காலத்தேயும்
பிற்காலத்தேயும் பல பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன. வள்ளலாரின் ‘அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங் கருணை’ என்னும் கருத்துத் தொடர்கள் தமிழகமெங்கணும் ஒலித்திடக்
கேட்கின்றோம். இது ஒன்றே வள்ளலாரின் கோட்பாடுகளில் மக்கள் ஈடுபட்டமையை நன்கு
புலப்படுத்தும். உயிர்களின் ஆன்மநேய ஒருமைப் பாட்டினை வற்புறுத்திய பெரும் அருளாளராக இவரை
நாம் காண்கின்றோம். மக்கள் பலரும் அருட்டிரு வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்த
அளவிலேயே இறைவனிடத்து ஈடுபாடு கொள்வரேனும் முற்றிலும் பொருள் உணர்ந்து கொள்வார்களெனக் கூற
இயலாது.
இந்நிலையில் நல்லதொரு உரையை எழுதி
நமக்களித்தவர், உரைவேந்தர், சித்தாந்தக் கலாநிதி ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள்.
சிறந்த முறையில் எழுதிய இவ்வுரை அருள் மணம் கொண்டு விளங்குவதை யாவரும் உணர்வர், அவர்கள்
முயற்சியில் ஒரு பகுதியே இன்று வெளிவருகின்றது.
'வள்ளலாரின் பெருமையை வையகமெல்லாம் பரப்புவேன்’ எனக்
கங்கணம் கட்டிக்கொண்டு எழுந்தவர் தொழிலதிபர் திரு. நா. மகாலிங்கம் ஆவார். ‘எண்ணிய
எண்ணியாங்கெய்தும் திண்மையுடையார் ஆதலின்’ அவர்தம் முயற்சி வெற்றியுறும். அன்னாரின்
அரும்பெரும் கொடையாலும், கொடை வள்ளல் நம் இணைவேந்தர் டாக்டர் முத்தையவேள் அவர்களது
கொடைத்திறத்தாலும், இப்பொன்விழா நாளில் இந்நூல் வெளிவருவது குறித்துப் பெரிதும்
மகிழ்வடைகிறேன்.
|