திருவருட்பா
மூன்றாம் திருமுறை
மூன்றாம்
தொகுதி
முன்னுரை 1
பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு துணைவேந்தர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
கடல் தாய் தன் அலைக்
கரங்களால் அள்ளி மகிழ விளையாடும், வித்தக மண் பரப்பெங்கும், அறிவொளி பரப்பிய
ஆசான்களைப் போலவே, அருள் ஒளி பரப்பிய ஞானிகளும் தோன்றியிருக்கிறார்கள்.
வேங்கடம் குமரி ஆயிடைத்தமிழ்
கூறும் நல் உலகத்தில் இத்தகைய ஞானிகள் பலர் தோன்றி இருப்பது நாம் செய்த பெறற்கரிய
பெறும் பேறாகும்.
அவ்வாறு தோன்றிய பெருமக்கள்
அனைவரும் அருள் வழங்குவதால் வள்ளல்களாகத்தான் திகழ்ந்தார்கள் என்றாலும் தனி ஒரு
பெருமகனாரே வள்ளலார் என்ற பெயருக்கு உரியவர் ஆனார். தனி உரிமை உடையவர் ஆனார்.
சிதம்பரம் இராமலிங்கர் என்று
திருப் பெயரைக் கொண்ட அந்த வள்ளல் பெருமான், அருளை மட்டுமா வழங்கினார்? மக்கள் கடவுள்
நெறி நிற்பதுடன் ஆன்மநேய ஒருமைப் பாட்டுவழி நிற்றல் வேண்டும் என்ற புதிய கோட்பாட்டையே
உலகிற்கு வழங்கினார். அன்பை வழங்கினார். அரும் பண்பை வழங்கினார். வம்பின்றி மக்கள்
வாழும் நெறியை வழங்கினார். தனிப் பெருங் கருணை வடிவான ஆண்டவன் அருட் பெருஞ்சோதியாக
இருக்கின்றான் என்ற உண்மையை வழங்கினார். பசி போக்க உணவு வழங்கினார். ருசித்து ஓத
திருவருட்பெருமை கூறும் முத்துப் பாக்களை அள்ளி வழங்கினார். தண்ணீரில் விளக்கெரியச்
செய்து தண்ணார் தமிழ் பாடும் தென்பாண்டி நாட்டானின் கண்ணுக்கு ஒளி ஆகும்
கைலைப்பதியானின் எல்லையற்ற பெருங் கருணை திறன் தன்னை எடுத்து வழங்கினார்.
சமுதாயம் நல் வழிப்பட,
அல்லும் பகலும் அவர் தொய்வின்றித் தொடர்ந்து வழங்கியன பலவாதலால் மக்கட் குலம் அவரை
வள்ளலார்! வள்ளலார்! என வாழ்த்தி வணங்கிப் போற்றித் துதித்தது.
புதுமை உலகின் திருப்புமுனையாகத்
தோன்றிய மகாகவி பாரதியார் வள்ளலாரை ஆன்மீக உலகின் விடிவெள்ளியாகவே கருதிப்
போற்றியுள்ளார்.
|
இந்துஸ்தானத்திற்குள் தமிழ்நாடு
முதலாவதாகக் கண் விழித்தது
இராமலிங்க சுவாமிகள் போன்ற மகான்கள்
தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு
ஆதிகர்த்தர்களாக விளங்கினார்கள் |
என்று, ஆன்மீக உலகில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்திய முதல் முாமுனிவராக வள்ளல் பெருமானைப் பற்றிப் பரவசத்தோடு
பாரதியார் கூறியுள்ளார்.
உலக ஒருமைப்பாடே
போரையும் பூசலையும் ஒழித்து, அமைதி வாசலைத் திறக்கச் செய்யும் அருமருந்து என்று, இன்று
உலகெங்கும் பேசப்படுகின்றது. உலக ஒருமைப்பாட்டைப் பற்றிய முழக்கங்கள் விண்ணை முட்டி
எதிரொலிக்கின்றன. ஆனால், இதற்கு வித்திட்ட வித்தகர், அதன் திறன் தெரிந்து, உரன்
அறிந்து உலகிற்கு முதன் முதலில் உணர்த்திய உத்தமர் நம் வள்ளல் பெருமானேயாவார்.
தெய்வப் பெரு நெறியையும்
ஒருமைப்பாட்டு நெறியையும் தமது பொன் தமிழ்ப் பாடல்களாலும் கண்ணணையை உரைநடை நூல்களாலும்
கேட்டார்ப் பிணிக்கும் தென்றல் தழுவிய தம் சொற்பொழிவுகளாலும் அருட்பெருஞ் சோதியை
ஏற்றி அதன் மூலம் தனிப்பெருங் கருணையை நிலைநாட்ட, என் கடன் பணி செய்து கிடப்பதே என்று
பொற்பணிகள் பலவற்றை நற்பணிகளாக நாளும் செய்தார் அந்த வடலூர் வள்ளல்.
அப் பெருமானுடைய ஈடு இணையற்ற
அரிய பெரிய அற்புத அருட் கருத்துக்கள் உலகெங்கும் பரவுமானால் மனித இனம் அமைதியையும்
ஆன்மீக ஆற்றலையும் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் எண்ணிய எண்ணியங்கு எய்துகின்ற இனிய
நெறியையும் உறுதியாகப் பெறலாம்.
நல்லாரின் தன்மைகளை
நல்லாரே அறிவார். அதன் வழி நிற்பர். அந்த ஞானிகளின் அற்புத கருத்துக்களை ஒல்லும்
வகையால் எல்லாம் மக்களிடையே பரப்புவர் என்பதற்கு ஏற்றதோர் எடுத்துக்காட்டாக
விளங்குபவர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள்.
வள்ளலாரின் வாழ்வு நெறிகளைப்
போற்றி ஒழுகும் அந்தப் பெருமகனார் தாம் தலைவராக இருந்து பெரும் பணி புரியும் இராமலிங்கர்
பணி மன்றத்தின் மூலம் அப்பெருமானின் நூல்கள் பலவற்றை மிகச் சிறப்பான முறையில்
பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள்.
தேவார திருவாசகத்திற்குப்
பின் அத்தகைய சிறப்பிடத்தைப் பெற்று விளங்கும் வள்ளல் பெருமானின் திருவருட்பாப்
பாடல்கள் உரையுடன் வெளி வருவதற்கும் அந்த அறச் செல்வரே துணை நின்றார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக
ஆராய்ச்சிப் பேரறிஞரும்-உரைவேந்தர் என்று தமிழ் உலகம் போற்றும் தமிழறிஞருமான ஒளவை,
சு.துரைசாமிப் பிள்ளை அவர்களைக் கொண்டு, பெரு நிதியும் செலவு செய்து திருவருட்பா
முழுவதற்கும் வரலாற்று முறைப்படி விரிவுரை எழுதச் செய்தார்கள்.
திருவருட்பா உரையுடன் கூடிய நூலை
வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகமே ஏற்றது என்று திரு.நா.மகாலிங்கம் அவர்கள்,
திருவருட்பா உரைநடைப் பகுதிகள் அனைத்தையும் பல்கலைக் கழக இணைவேந்தரும், பெருவள்ளலாருமான
ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அரசர் முத்தையவேள் அவர்களும்
பெரு விருப்பத்துடன் வெளியிட உடன்பட்டு அப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். திருவருட்பா
முழுதுக்கும் வரலாற்று முறைப்படி உரை காணச் செய்த அருட்செல்வர். நா. மகாலிங்கம் அவர்களுக்கு
என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருவருட்பா உரையுடன் கூடிய முதல்
திருமுறை பல்கலைக் கழகப் பொன் விழாவில் வெளியிடப்பெற்றது.
திருவருட்பாவில் ஏனைய
பகுதிகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்ற விருப்பம் செட்டி நாட்டரசர் முத்தையவேள்
அவர்களுக்கும் எனக்கும் பெருவிருப்பமாக இருந்து வந்தது. அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு
இராம. வீரப்பன் அவர்களின் அன்பாலும் ஆர்வத்தாலும் எங்களுடைய விருப்பம் நிறைவேறியது.
அறநிலையத் துறை அமைச்சர்
அவர்கள் தமிழக அரசின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை மூலம் கடனாக நான்கு
இலட்சம் ரூபாய் கிடைக்க வழி வகுத்தார்கள்.
திருபணியனைய இந்த
நற்பணிகளுக்கு மனமுவந்து உதவிய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன்
அவர்களுக்கும் தமிழக அரசிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலவைத் தலைவர் சிலம்புச்
செல்வர் டாக்டர். ம.பொ.சி. அவர்கள் தலைமையில் அற நிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு
இராம.வீரப்பன் அவர்கள் வெளியிட முதற் பிரதிகளை அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள்
பெற்றுக்கொள்ள இணை வேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் சிறப்பிக்க
2,3,4,5 ஆம் பகுதிகள் மிகச் சிறப்பான முறையில் வெளியிடப்பெற்றன.
தொடர்ந்து ஆறாம் பகுதி
வெளிவருகின்றது. இந்தச் தொகுதி மூன்றாம் திருமுறையில் மகாதேவ மாலைப் பகுதியைத்
தொடர்ந்து கலைமகள் வாழ்த்து முதலிய எட்டுப் பகுதிகளைக் கொண்டதாக விளங்குகிறது.
இப் பகுதிகளிலும் வள்ளல்
பெருமான் சிவபிரானிடம் கொண்ட பெரு நேயமும் அதே பொழுது சமயம் என்ற பெயரால் பயனற்ற
செயல்களில் ஈடுபடலாகாது என்ற குறிப்பும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
|
நெல்லொழியப்பதர் கொள்ளவார்போல இன்ப
நிறைவொழியக் குறை கொண் மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதயமெலாங்
கலந்து கலந்தினிக்கின்ற கருணைத் தேவே |
எல்லாமே காலத்தால்
நடைபெறுதல் வேண்டும். இறைவன் கருணை தனைப் பெருவதற்கும் இது பொருத்தம் என்பது, வடலூர்
வள்ளல் பெருமான் கருத்தாகும்.
|
முன் மழை வேண்டும் பருவப்
பயிர் வெயில் மூடிக் கெட்ட
பின் மழை பேய்ந்தென் பேறுகண்
டாய் அந்தப் பெற்றியைப் போன்
நின் மழை போற் கொடை இன்றன்றி
மூப்பு நெருங்கியக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை
பேய்ந்தென்ன பூரணமே. |
வள்ளல் பெருமானின் இப் பாடற்
பகுதிகளில் தேவாரம் பாடிய மும் மூர்த்திகள் பற்றிய செய்திகளை விரித்துச் சுவைபடச்
சொல்லிச் செல்வதால் பேரின்பம் பெருகுவதுடன் முன்னோர் பற்றிய வரலாற்றினை அறியவும் அவை
பேருதவியாக அமைகின்றன.
வள்ளல் பெருமானின்
திருவருட்பா உரை நூல் பகுதிகள் தொடர்ந்து வெளி வருகின்றன. இந்நூற் பகுதிகளை
உலகெங்கினுமுள்ள மக்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுதல் வேண்டும் என்று பல்கலைக் கழக
இணை வேந்தர் டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி அவர்களும் நானும் பெரிதும்
விரும்புகின்றோம்.
அண்ணாமலைப் பல்கலைக்
கழகம் என்ற கல்விப் பேராலயத்திலிருந்து, அருள் மணியின் திருஒலிபோல வெளிவரும்
திருவருட்பா பகுதிகளை, பல்துறை அறிஞர்களும் கல்விச் சாலைகளும் நூல் நிலையங்களும் மற்றும்
பொது அமைப்புகளும் வாங்கிப் பயன் பெற வேண்டும் என உளமாற விரும்புகின்றேன். அதுவே நாம்
வள்ளல் பெருமானுக்குக் காட்டும் அளப்பரிய, ஆர்வம் மிக்க நன்றிக் கடன் ஆகும்.
சை. வே. சிட்டிபாபு
|