திருவருட்பா
மூன்றாம் திருமுறை
மூன்றாம்
தொகுதி
முன்னுரை 2
பேராசிரியர் ராம.
சேதுநாராயணன் துணைவேந்தர், அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
உலக உயிர்களுள்
மானுடப்பிறவி மிகமிக அருமையுடையது. இதனை யுணர்ந்தே ஒளவையாரும்,
|
‘அரியது கேட்கின் வரிவடி வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறத்தலும் அரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையும்
மூங்கையும் செவிடும் கூனும் குருடும்
பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே. . .’ |
எனப் பாடிச்
சென்றுள்ளார். மக்களாகப் பிறந்தவர்கள் பிறவிப் பயனடையும் நெறியில் உணர்ந்து செல்லுதல்
வேண்டும். ஞான பூமியாகிய பாரத நாட்டில் சித்தர்களும், யோகியர்களும், சமய ஞானியர்களும்,
தத்துவ வித்தகர்களும் பிற அருட்செல்வர்களும் தோன்றி, நாட்டின் பெருமையை உலக
அரங்கத்தில் உயர்த்தியுள்ளனர். அத்தகைய நல்லோர் வரிசையில் இடங்கொண்டு, உலக
ஒருமையுணர்வைப் போதிக்க முற்பட்டவரே வடலூர் இராமலிங்க அடிகள்.
இராமலிங்க
அடிகளாரை, வள்ளலார் என்றும் வள்ளல் பெருமான் என்றும், திருவருட்பிரகாச வள்ளலார் என்றும்
ஆர்வமுடன் அழைத்து மகிழ்கின்றனர். மக்கள் நன்னெறியிற் சென்று வாழ்வாங்கு வாழ்வதற்காக
அவர் சத்திய சன்மார்க்க நெறியை வகுத்தார். ‘அருட்பெருஞ் சோதியே தனிப்பெருங்கணை’
யென்று அருள்முழக்கமிட்டார். ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் மரணமிலாப் பெருவாழ்வையும்
பற்றிப் போதித்ததுடன் தாமும் அவற்றைத் தம் வாழ்வில் செயற்படுத்தினார்.
வள்ளற்பெருமான்
உலகமக்களின் நலத்திற்காகவே தம் உள்ளுணர்வால் திருவருட்பா பாசுரங்களைப் பாடி
வழங்கியவர். அந்தப் பாசுரங்களெல்லாம் தேனினும் இனியவை; தென்றலைப் போன்று மனத்துக்கு
இதந்தருபவை; தெய்வநலம் வாய்ந்தவை.
வள்ளலாரின்
இளமையில் அவர்தம் உள்ளங்கவர்ந்தவன் திருத்தணிகை முருகப் பெருமான். அந்த முருகனின்
ஆறுமுகங்களைப் போலவே திருவருட்பாவும் ஆறுதிருமுறைகளாக விளங்குகின்றது.
அப்பெருமானின்
தெய்வநலக் கண்ணொளிபோன்ற பிரகாசமான கருத்துக்கள் உலக அரங்கில் நிலைபெறுமேயானால்
உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நின்று நிலவும்; உலகமே கடைத்தேறும்.
நாளும்
வள்ளற்பெருமானின் நற்கருத்துக்களைப் போற்றி அவரது செந்நெறியில் வாழும் அருட்செல்வர்
டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள். திருவருட்பாவின் அருமையையும் பெருமையையும் நன்குணர்ந்த
அவர்கள் அந்த அருள்நூல் பரவுவதற்குச் செயற்கரிய செயல் - திருத்தொண்டு - ஒன்றைச்
செய்துள்ளார்கள்.
தமிழுலகம்
போற்றும் உரைவேந்தரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சிப்
பேரறிஞருமான ஒளவை. சு. துரைசாமி பிள்ளையவர்களைக் கொண்டு, திருவருட்பா முழுவதற்கும்
உரையெழுதச் செய்துள்ளார்கள். வள்ளற்பெருமானது வரலாற்றுமுறைப்படி அந்த உரை அமைந்துள்ளது.
தெளிவான
உரையுடன் கூடிய திருவருட்பாவினைப் பகுதிப் பகுதிகளாகப் பிரித்து வெளியிடுவதற்கு அண்ணாமலைப்
பல்கலைக்கழகமே ஏற்றது என்று கருதிய அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள், உரைப்பகுதிகள்
அனைத்தையும் பல்கலைக்கழக இணைவேந்தரும் பெருவள்ளலுமாக விளங்கிய செட்டி நாட்டரசர்
முத்தையவேள் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அரசர் பெருமானும் பெருவிருப்புடன் அந்த
நற்பணிக்கு உதவ முற்பட்டமையால் தெளிவான உரையுடன் கூடிய திருவருட்பா - முதல் திருமுறை
பல்கலைக்கழகப் பொன்விழாவில் வெளியிடப் பெற்றது. இந்நிலையில் அருட்செல்வர்
மகாலிங்கம் அவர்களுக்கும் செட்டி நாட்டரசர் முத்தையவேள் அவர்களுக்கும் தமிழுலகம் என்றும்
நன்றிக் கடப்பாடு உடையது.
சிலம்புச்
செல்வர் டாக்டர் ம. பொ. சிவஞானம் அவர்கள் தலைமையில் மதிப்பிற்குரிய இராம.
வீரப்பன் அவர்களால் 2,3,4,5- ஆம் தொகுதிகள் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டன.
அவற்றைத் தொடர்ந்து ஆறாந் தொகுதியும் ஏழாந்தொகுதியும் வெளிவந்துள்ளன; இப்பொழுது
எட்டாந் தொகுதி வெளிவருகின்றது; ஏனைய தொகுதிகளும் உருவாகி வருகின்றன.
இத்தொகுதியில்
ஐந்தாம் திருமுறையில் பிரசாத மாலை தொடங்கி ஆளுடைய அடிகள் அருண்மாலை நிறைவாகப் பத்துப்
பகுதிகளும் ஆறாம் திருமுறையில் பரசிவவணக்கம் தொடங்கி சிற்சபை விளக்கம் முதலிய
இருபத்தொன்பது பகுதிகளும், இடம் பெற்றுள்ளன.
இப்பகுதிகள்
அனைத்திலுமே தோன்றாய்த் துணையான இறைவன் வள்ளலாருக்குத் தோன்றுந் துணையாக நின்ற
பெற்றியினையும் அம்மை கொண்ட அருட்பாங்கினையும் தெளிவாகக் காணலாம். பொதுவாகப்
பாடல்களனைத்திலுமே தில்லைக்கூத்தன் பெரும்புகழ் இனிது பரவப்படுகிறது.
Êசிறுகுழந்தையும்
செய்யமேனிச் சிவனிடம் அருள்வேண்டும் நிலையிலே வள்ளலார் மட்டும் அதனை
வேண்டாதிருப்பாரா? இந்தக் குறிப்பினை வள்ளலார் மிகக் கனிவுடன் புலப்படுத்திக்
காட்டுகிறார்; இறைவன் அனைத்தும் ஆனவன் என்பதனை அடுக்கடுக்காய் அழகுற நவில்கின்றார்.
|
தாயும் தந்தையும்
தெய்வமும் குருவும்
தயங்கு கின்றதோர் தலைவனும் பொருளும் ஆயும் இன்பமும்
அன்பும் மெய்அறிவும்
அனைத்தும்
நீஎன ஆதரித் திருந்தேன்
ஏயும் எள்ளை
வீரக்கம் ஒன்றிலையேல்
என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
சேயும் நின்னருள்
நசையுறுங் கண்டாய்
தில்லை
மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே. |
பேரொளி விளக்காகப்
பரமனைக் கண்ட வள்ளல் பெருமான், அருட்பெருஞ்சோதி என்னும் தனிப்பெரும் சோதியை ஆர்வமுடன்
ஏற்றி, அனைவரின் அக இருளையும் நீக்கி நமக்கும் புதுவழிகாட்டிச் சென்றுள்ளார்.
அப்பெருமானின் திருவருட்பாப் பாடல்களில் ஒளிரும் தெய்வீகக் கருத்துக்கள் உலகம் எங்கும்
பரவவேண்டும் என்பதே பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்களின்
எண்ணமும் ஆர்வமும் ஆகும்; அவ்விருப்பமே என் விருப்பமும் ஆகும்.
திருவருட்பாத்
தொகுதிகள் அனைத்தையும் அனைத்துத் துறையிலும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் வாங்கிப் பயன்
பெற வேண்டும் என்று அன்புடன் விரும்புகின்றேன்.
(ஒப்பம்) ராம.
சேதுநாராயணன்
|