திருவருட்பா

மூன்றாம் திருமுறை

மூன்றாம் தொகுதி

முகவுரை

டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி அவர்கள்
இணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

எத்தனை கோடி பணம் இருந்தாலும் வாழ்வில் நிம்மதி வேண்டும். அதனைப் பொருள் கொடுத்துப் பெற இயலாது. அருள் கொண்டு ஆன்மீக நெறிநின்று, தெய்வங்களை வழிபட்டே பெறல்வேண்டும்.

நிம்மதியற்ற வாழ்க்கை ஆதவன் இல்லாத ஆகாயம் போன்றது.

நிலைத்த நிம்மதியை இறைவன் ஒருவனே தரமுடியும். இதற்கு மன ஒருமைப்பாடே, ஏற்ற, இனிய, இன்பம் தரும் நல் நெறியாகும்.

மனம் விரும்பி ஏற்படுகின்ற ஒருமைப்பாட்டின்மூலம், உலக மக்களெல்லாம் வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து, ஒற்றுமையாகி ஒரு குடைக் கீழ் வாழ்கின்ற உன்னதமான நிலை ஏற்படமுடியும்.

இதனையே வள்ளல் பெருமான், ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற புதிய கொள்கையாகக் கண்டார்.

பக்தி என்பது, மனித குலத்திற்கு, அருள் வழிப்பட்ட புதிய சக்திகளை வழங்க வேண்டுமே தவிர, அதன்மூலம் மனித குலத்திற்குப் புறம்பான கொள்கைகளோ, மூடநம்பிக்கைகளோ, தோன்றக் கூடாது என்பதில் வள்ளல் பெருமான், மிகத் தீவிரமான நோக்குடையவராக இருந்தார்.

வள்ளல் பெருமானது திருவருட்பாப் பாடல்கள், இறைவனைப் போற்றுகின்ற வாழ்த்துப் பாக்களாக மட்டும் அமையாமல், அவன் நெறிச் செல்லப் புதிய வழிகளைக் காட்டும் ஒளிச்சுடர்களாக விளங்குகின்றன. வாழ்க்கைத் தத்துவங்களாக மிளிர்கின்றன. தீமைத் திமிங்கிலங்களை அகற்றி, வாய்மை நாவாய்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாகக் காட்சி தருகின்றன. மாட்சி பெறுகின்றன.

  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்

என்று வள்ளல் பெருமான் பாடும்போது, அஃறிணைப் பொருளான பயிர் வாடுவது கண்டுகூடத் தாங்காத தளிர் உள்ளம் அவர் உள்ளம் என்பது தெளிவாகின்றது.

அத்துடன் பயிர் வாடினால், பசியால் மக்கள் வாடுவார்களே என்ற எதிர்கால நோக்கும் அதில் அடங்கி இருக்கின்றது என்பதை எண்ணும் போது, வள்ளல் பெருமான், எல்லாப் பொருள்களையும் இனிய தாயுள்ளத்துடன் நோக்கினார்; அவற்றின் பிணி போக்கி ஊக்கினார்என்பது தெளிவாகின்றது.

வள்ளல் பெருமானின் உள்ளம், பத்தரை மாற்றுப் பசும்பொன்னினும் மேலானதாக விளங்கி இருக்கின்றது என்பதனைத் திருவருட்பாப் பாடல்கள் எங்கும் நாம் எளிதாகக் காண இயல்கிறது.

தாம், ஒருமையுடன் இறைவனைப் பணிவதோடல்லாமல், தம்மைச் சூழ்ந்தவர்களும் ஒருமையுள்ளம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்றே வள்ளல் பெருமான் விரும்பியுள்ளார்.

  ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்றைக்கின்ற
     உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
    உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்ம்மை
    பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மத மானபேய்
    பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும் உனை
    மறவாது இருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துவளர்
    தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வ மணியே!

இந்த ஒரு பாடல் மூலமே, மனிதன் முழு மனிதனாகும் பேற்றியினை அற்புதமாக அவர் கூறியுள்ளார்.

சிதம்பரத்திற்கு அருகில் அவதரித்துப் பரம் பொருளை, இளமையிலேயே கண்டு, பாடும் திறம் பெற்ற அந்தப் பெருமானின் திருவருட்பாப் பாடல்களுக்குப் பேராசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய வரலாற்று முறை உரை நூற்பதிப்பு, தில்லையில் ஆடும் இறைவனின் எல்லையில் உள்ள, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்மூலம் வெளியிடப்பெறுவது எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும்.

திருவருட்பாவிற்கு உரை கண்டு, செயற்கரிய செயல் நிகழக் காரணமான அருட்செல்வர் பொள்ளாச்சி டாக்டர் தா. மகாலிங்கம் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி உரியது.

அவர்கள் தட்டச்சுப் பகுதிகளைக் கொண்டுவந்து என் தந்தையார் செட்டி நாட்டரசர், டாக்டர் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களிடம் கொடுத்து, மகிழ்ந்த காட்சியினைக் கண்டு மகிழ்ந்தவன் நான். என் தந்தையார் முன்னாள் இணைவேந்தர் டாக்டர் முத்தையவேள் அவர்கள் திருவருட்பாப் பகுதிகள் அச்சாகி வெளிவந்து மக்கள் பயன்பெற வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு, அவை வெளிவர வழிவகை செய்தார்கள்.

பொன்னான இந் நூல் தொகுதிகள் அச்சாகி வெளிவர, அறநிலையத் துறைமூலம் வட்டியில்லாக் கடனாக நிதி உதவி கிடைக்க வழி வகுத்த தமிழக அரசு அறநிலையத்துறைக்கு என் அன்புகலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவருட்பா வரலாற்று முறைப் பகுதிகள் அனைத்தும் அச்சாகி வெளிவரவேண்டும் என்பதில் நம் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ராமசேது நாராயணன் அவர்கள் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தந்து சிறப்பானமுறையில் அப்பணியை நிறைவு பெறச் செய்துள்ளார்கள்.

திருவருட்பாப் பதிப்புச் சிறப்பு அலுவலர் புலவர் நாகசண்முகம் அவர்களும் இந் நூல் தொகுதிகளை அச்சியற்றிய மாருதி அச்சகம் திரு. வி. பார்த்திபன் அவர்களும் தம் பணிகளை மிகச் செம்மையாய்ச் செய்துள்ளார்கள்.

திருவருட்பா வரலாற்றுமுறை உரைப்பதிப்பாக வெளிவந்துள்ள பத்துப் பகுதிகளையும் பல்துறையினரும் வாங்கிப் பயன்பெற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன்.

அருட் பெருஞ் ஜோதியாய் ஆண்டவனைக் கண்டு, புதியதோர் உலகுக்காக வழிகாட்டிய வள்ளல் பெருமானின் வழிச்சென்று நாம் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வோமாக.

எம். ஏ. எம். இராமசாமி