முகப்பு திருவருட்பா தொடக்கம்

மூன்றாம் திருமுறை

மூன்றாம் தொகுதி


6. திருவருள் முறையீடு

திருச்சிற்றம்பலம்

கட்டளைக் கலித்துறை

    உலக முதல்வன் சிவபரம்பொருள் என்பதைப் பலவகையில் அறிந்து கொண்டாலும் அவனது திருவருளை உணர்வது அரிது. காணக்கண்ணும் கேட்கக் காதும் பேச வாயும் படைத்தளித்த இறைவன் அதனோடு நின்று விடுவதில்லை. கண் காது முதலியவற்றினால் காண்பதும் கேட்பதுமாகிய செயல்கள் இனிது நடப்பதற்கு அவற்றின் உள்ளே பல நுண்ணிய கருவிகளை அளித்துள்ளான். அக்கருவிகளை இயக்குவது நாமல்ல. காணப்படும் பொருளுக்கு ஏற்பக் கண்களை விழித்தும் சுருக்கியும் பார்க்கலாம்; கேட்கப்படும் ஓசைக்கேற்பத் தலையைச் சாய்த்தும் நீட்டியும் காது கொடுத்துக் கேட்கலாம். அவற்றின் உள்ளிருக்கும் கருவிகளை நாம் ஒன்றும் செய்வதில்லை. அவைகள் செம்மையாக இயங்கினாலன்றிக் கண் காணாது; காது கேளாது. அவற்றோடு ஒன்றி நின்று செவ்வையாய் இயங்குமாறு செய்வது தான் இறைவன் திருவருள். கண்டதும் கேட்டதுமாகியவற்றை ஆராய்ந்து நலம் அறிந்து இன்புறச் செய்யும் கருவி மனம். மனம் என்பது உண்டு என்று யாரும் உரைப்பர்; ஆனால் அம் மனம் உடற்குள் எங்கே எப்படியிருக்கிறது என இன்றுவரை வளர்ந்து பெருகியுள்ள உடற்கூற்று விஞ்ஞானமும் முழுவதும் கண்டறியவில்லை. அதன் அமைப்பும் அது தொழில்புரியும் திறமும் மக்களறிவுக்கு இன்னும் எட்டியதில்லை. மனம் கருவியாக எண்ணி எண்ணி அறிவு நுண்ணியரான பெருமக்கள் உரைப்பது கேட்கின்றோமே யன்றி கண்டறியும் வாய்ப்பு, இன்னமும் தோன்றவில்லை. தோன்றாத் துணையாய் அறிவுக்கும் செயலுக்கும் கருவியாய் உளதெனப்படும் மனம், தன் தொழிலைச் செம்மையாய்ச் செய்தற்கு அதனுள் ஒன்றாய் நின்று இயக்குவதும் திருவருள்.

    இத் திருவருட்கு முதல் சிவபரம் பொருள். அதன் திருவளை எண்ணி அறிவது அருளறிவு என்று பெரியோர் கூறுவர். உடலோடு கூடி உலகில் நாம் வாழ்தற்கு இன்றியமையாதது இத்திருவருள் எனத் தெளிவது மக்கள் வாழ்வுக்கு ஆக்கமாகும். மேலும் இவ் உலகியலிற் காணப்படும் பொருள் அனைத்தினும் ஒன்றாய்க் கலந்து உலகு முறை பிறழாது நிற்பதற்கும் இத் திருவருளே முதல். உடற் கருவிகள் தம்மையுடைய உயிர்கள் நன்னிலையில் மெய்யுணர்ந்து இன்புறுதற்கும் நிலை கலங்கி மருண்டு பொய்ந்நெறி பற்றித் துன்புறுதற்கும் திருவருளே அடிப்படையாவதால், அதுகுறித்து அதற்கு முதல்வனான பரம்பொருளை வேண்டுவது முறையும் கடமையுமாகும். அதுபற்றியே அருள்வேண்டிப் பாடும் இப் பாமாலையைத் திருவருள் முறையீடு என்று பெயர் குறித்துள்ளார். விளக்கிடுவதை வீளக்கீடு என்பதுபோல, முறையிடுவதை முறையீடு என மொழிகின்றார்.

    கயிலைமலையில் மாதை மடுவில் நிறைந்து பெருகி வழிந்தோடிவரும் கங்கைப் பேரியாறுபோல வடலூர் அடிகளின் உள்ளத்தில் நிறைந்து பெருக்கிட்டுவரும் பாட்டுக்கள் “சவியுறத் தெளிந்து தண்ணென்ற ஒழுக்கம் தழுவி” வருகின்றன. அதனை ஆங்காங்கு அணையிட்டுத் தேக்கிப் பாகுபடுத்திப் பயன் கோடல்போல இருநூற்றுக்கு மிக்குற்றுத்தோன்றும் இப்பாட்டுக்களை இருபது தலைப்பில் தேக்கிப் பயன் கொள்ள முயல்கிறது இவ்விரிவுரை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்