தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

iv

முன்னுரை
 

  "வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
   விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை
   ஓதாதே வேத முணர்ந்தான் தன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் தன்னை
   அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை1
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
   ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே." - 6. 26 - 2
 

தாயுமான அடிகளாரின் திருப்பாடல்கள் செம்பொருட்டுணிவாம் சித்தாந்த சைவத்தின் சிறப்பனைத்தும் தெளித்துக் காட்டுங் கருவூலமாகும். இந் நூலின்கண் ஐம்பத்தாறு பெருந் தலைப்புகள் அமைந்துள்ளன. மொத்தத் திருப்பாடல்கள் ஆயிரத்து நானூற்று ஐம்பத்திரண்டு.

இந்நூல் சித்தாந்த சைவக் கொள்கைகள் அனைத்தினையும் விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகின்றது. திருக்குறள் போன்று எளிதாக யாவர்களும் பாடஞ் செய்து பயன்கொள்ளுமுறையில் (43) பராபரக்கண்ணி, (44) பைங்கிளிக் கண்ணி, (45) எந்நாட் கண்ணி, (46) காண்பேனா என் கண்ணி, (47) ஆகாதோ என் கண்ணி, (48) இல்லையோ என் கண்ணி, (49) வேண்டாவோ என் கண்ணி, (50) நல்லறிவே என் கண்ணி, (51) பலவகைக் கண்ணி ஆகிய எழுநூற்று எழுபத்தொன்று கண்ணிகள் அமைந்துள்ளன. இவை ஈரடி எண் சீராகக் காணப்படினும், இறுதிச்சீர் அனைத்தும் அவ்வத் தலைப்பின் பெயராகவே அமைந்துள்ளன. அம் முறையின் நோக்கின் செய்யுட்கள் அனைத்தும், எவ்வேழு சீர்களான் திருக்குறள் போன்று அமைந்தமை காணலாம். இவற்றைக் குறள் வெண் செந்துறை என்பதன்பாற் படுப்ப.

மேலும் (28) உடல் பொய்யுறவு என்னும் தலைப்பின்கண் அமைந்துள்ள செய்யுட்கள் எண்பத்து மூன்றும் வெண்பா யாப்பான் அமைந்துள்ளன. வெண்பா யாப்பும் எளிதாகப் பாடம்பண்ணுவதற் குரியதேயாம். பொன்னை மாதரை எனத் தொடங்குவதும் சிறிய பாட்டுகளேயாகும். (54) ஆனந்தக் களிப்பு என்னும் தலைப்பின்கண் முப்பது கண்ணிகள் காணப்படுகின்றன. அவை மேலாம் மெய்யுணர்வுக் கருத்துகளை மிக எளியமுறையில் தெளிவாக விளங்கும் வண்ணம் உணர்த்துகின்றன.

1.

'துண்ணென்'. சிலப்பதிகாரம், 12, வேட்டுவ வரி.