போற்றத்தகுந்த செயலாகும். நுண்மாண் நுழைபுலம்மிக்க
இப்பேரறிஞர்களின் செயலால் நம் தமிழன்னையும், தமிழ்நாடும் பெரும் பயனுறுவது
திண்ணம். |
தணிகைப்புராணத்தை அதன் பெருமைக்கு ஏற்ற
உரையுடன் பதிப்பித்து நல்கும் பேறு எங்கள் கழகத்திற்கு வாய்த்தது குறித்துப்
பெருமிதமும் பெருமகிழ்வும் அடைந்துள்ளோம். |
கற்பவர்களின் நலனைக் கருதியும், திருத்தணிகையைக்
குறித்து இம்முனிவரர் பாடியருளிய நூல்கள் மூன்றும் சேர்ந்து ஒரே தொகுதியாக
இருப்பதுவே பொருத்தமாகும் என்பது கருதியும் திருத்தணிகைப் பதிற்றுப்பத்து
அந்தாதி, திருத் தணிகை ஆற்றுப்படை என்னும் இருநூல்களையும் இந்நூலின்
பின்னர் இணைத்துள்ளோம். |
திருத்தணிகைப் பதிற்றுப்பத்து அந்தாதிக்கு
எங்கள் கழகப் புலவர் திரு. ஆ. பொன்னுசாமிப்பிள்ளையவர்கள் குறிப்புரை
எழுதியுதவியுள்ளார்கள். அதற்கு இதுவரையிலும் யாரும் உரை எழுதவில்லை. |
திருத்தணிகை யாற்றுப்படைக்குப் புரசை அட்டாவதானம்
சபாபதி முதலியாரவர்கள் எழுதியருளிய விரிவுரை சாலச்சிறந்ததாக இருந்தமையால்
அவ்வுரையுடன் அதனைப் பதிப்பிக்கலானோம். |
பேராசிரியர் திரு கந்தசாமியாருட்பட எல்லா
உரையாசிரியர்களுக்கும் நாங்கள் எழுமையும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்.
|
இந்நூல் வெளியீட்டுச் செலவுத் தொகையில்
ஒருபகுதி மத்திய அரசின் அறிவியலாராய்ச்சி பண்பாடு செய்தித் துறை அமைச்சரால்
நன்கொடையாக வழங்கப் பெற்றிருக்கிற தென்பதை நன்றியறிதலுடன் தெரிவித்துக்
கொள்ளுகின்றோம். |
நம் செந்தமிழன்னைக்குப் பெருமைமிக்க அணிகலன்களாக
விளங்கும் இந்நூல்களையும் தமிழகம் ஏற்றுக்கொண்டு மேலும் இத்தகைய திருப்பணியில்
எங்களை ஊக்கத்தோடு ஈடுபடும்படி செய்யும் என நம்புகின்றோம். |
சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தார் |