முகப்பு தொடக்கம்

இவ்விலக்கண நூல் தனக்கு முற்பட்ட இலக்கியங்களினின்றும் தோன்றியதேயாயினும் பின்னர்க் காலந்தோறும் காலந் தோறும் புதிது புதிதாகத் தோன்றுகின்ற இலக்கியங்கள் அனைத்திற்கும் அப்பழம்பெருந் தொல்காப்பியமே இலக்கண நூலாகவும் அமைகின்ற அதன் சிறப்பினை யாரே கூறவல்லார்? அந்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்திலேயே பிற்காலத்தே தோன்றிய இத்தகைய புராணங்கட்கும் இலக்கணங் காணப்படுதல் வியப்பேயாகும். அத்தொல்காப்பியத்தில்,


"அம்மை யழகு தொன்மை தோலே
 விருந்தே யியைபே புலனே இழைபெனாஅப்
 பொருந்தக் கூறிய"

(தொல். செய். 1)

எண்வகை வனப்பு நூல்களில், "தொன்மை" என்னும் வனப்பு நூலே பிற்காலத்தே புராணங்கள் என்று கூறப்படுகின்றன. தொன்மை எனினும் புராணம் எனினும் ஒக்கும். தொன்மை தூய செந்தமிழ்ச் சொல்; புராணம் வடசொல். இத்துணையே வேற்றுமை. இரண்டற்கும் பொருள் ஒன்றேயாம்.

இனி, இத்தொன்மை என்னும் வனப்பியலுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் சிறப்பிலக்கணங் கூறுங்கால்,

"தொன்மை தானே
 யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே"

(செய். 237)

என்றோதுவர். இதற்கு உரைவகுத்த பேராசிரியர், "தொன்மை யென்பது உரைவிராஅய்ப் பழமையவாகிய கதைபொருளாகச் செய்யப்படுவது" என்று கூறி, "அவை பெருந் தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன" என்று எடுத்துக் காட்டும் ஓதினர். இத்தணிகைப் புராணத்திற்கும் இதுவே இலக்கணமாகும் என்க.

இனி, புராணம் என்னும் இப்பெயர் வடமொழியின்கண் ஒருசார் நூல்களின் பெயராகும். வடமொழியாளர் இத்தகைய புராணங்கள் பதினெட்டு என்று தொகுத்துக் கூறுவர். அதனை இந்நூலாசிரியர் நைமிசப் படலத்தில் "வாய்ந்த மூவறு புராணம் முன்பு இவண் வகுத்துரைத்தனை" என அந் நைமிசாரணியத்து இருடிகள் சூதமுனிவனை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளமை யானும் உணர்க. அச்சூதமா முனிவன் பதினெண் புராணங்களுள் வைத்துக் கந்தபுராணத்தி லமைந்த ஐந்தாஞ் சங்கிதையாகிய சங்கர சங்கிதையின்கண் இறுதியில் இத் திருத்தணிகையின் சிறப்புக் கூறப்பட்டுளதென்றும், அதனை நுங்கட்குக் கூறக் கேண்மின்! என்றும் தோற்றுவாய் செய்து இத்தணிகைப்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்