முகப்பு தொடக்கம்

மொந்தை பழையதாயினும் அதனுட் பெய்யப்பட்டுளது நறுஞ்சுவைத் தேனே என்று சிறிது சுவைத்தறிந்த பின் யாரே அதனைக் கைவிடத் துணிவார்? புராணமாயினும் கச்சியப்ப முனிவர் அதனுட் பெய்து வைத்திருக்கின்ற கலையமிழ்தமோ பருகப் பருகத் தெவிட்டாததே என்பதனை இப் புராணத்தை ஆழ்ந்து பயில்வோர் உணர்ந்து கொள்வர் என்பது தேற்றம்.

புலமையின் சிறப்பினை ஒரு புலவன் இயற்றிய செய்யுள்களே தம்மை ஓதுபவர் தமது பொருளை உணர்வதற்கு முன்பே தம்முடைய இன்னோசையாலும் அழகாலும் நன்குணர்த்தி விடுகின்றன. இவற்றுள் செய்யுளினது அழகுக்கும் இன்னோசைக்கும் யாரும் இலக்கணம் கூறியதில்லை. அணியிலக்கம் செய்யுளின் அழகைத்தானே விளக்குகின்றது? அங்ஙனமிருப்பவும் செய்யுள் அழகிற்கு இலக்கணம் யாரும் கூறியதில்லை என்பது பொருந்தாதென்று கருதவேண்டா. வாய்மையாகவே செய்யுளினது அழகு அதற்குக் கூறப்பட்ட அணி இலக்கணங்களை யெல்லாம் கடந்து நிற்பதாம். ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் அதற்கு இலக்கணம் வகுக்கும்போது மாத்திரை முதலாக அம்மை முதலிய எண்வகை வனப்புகளீறாக முப்பத்து நான்குறுப்புகளும் தொகுத்தோதிப் பின்னர் விரித்தோதுவாரேனும் யாம் ஈண்டுக் கூறிய அழகு அவ்வுறுப்புகளுள் அடங்கிற்றில்லை. இவற்றுள் ஆசிரியர் தொல்காப்பியனார் 'அழகு' என்றும் 'வனப்பு' என்றும் பேசுவாரேனும், அழகு என்னும் உறுப்பாவது,

"செய்யுண் மொழியாற் சீர்புனைந்து யாப்பின்
 அவ்வகை தானே அழகெனப் படுமே"

என அதனியல்பு கூறுமிடத்து அந்த அழகிற்கு நன்கு இலக்கணம் கூறிவிட்டார் என்று பாராட்டுதற்கில்லை. ஏனெனில் செய்யுள் மொழியாலே சீர்புனைந்து யாத்த செய்யுள்கள் எல்லாம் அழகு பெற்றுத் திகழ்வதில்லை யாகலான். தொல்காப்பியர் தம்மால் அதற்கு இலக்கணம் கூறுதலும் அரிதே என்பது தோன்றவே அவ்வகைதானே அழகெனப்படும் என்புழி வகை என்னும் மிகையாற் புலப்படுத்தினராதல் வேண்டும். செய்யுள் அழகிய சொல்லாலியன்ற தொகுப்பே ஆயினும் அச் செய்யுளின் அழகுமட்டும் சொன்னலம் கடந்து நிற்பதாகும்; தெய்வத் தன்மையுடையதாகும். ஆதலால் அதனை யாரானும் கூறிக் காட்டொணாது என்க.

இனி, தொல்காப்பியனார்க்குப் பன்னூறாண்டு கழித்து நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர், ஒரு செய்யுள் பயில்வோருளத்தை உருக்குகின்ற பண்புடையதாயிருப்பதற்கும் செய்யுட்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்