முகப்பு தொடக்கம்

எனவரும் இச் செய்யுள்களுள் வைத்து, கச்சியப்ப முனிவரையும் தெய்வப்புலமைத் திருவள்ளுவரையும் ஒரு சேரக் கண்டு தொழலாகும்.

இனி, மிகப் பழம் பெருநாடாகிய அத்தொண்டைநாடு வள்ளன்மை என்னும் மாற்றாரால் உள்ளழிக்கலாகா வன்மை மிக்க மெய்க்காப்பினைப் போர்த்து மிக்க அறங்கள் என்னும் கூர்த்த படைக்கலன்களைக் கைப்பற்றி வாய்மையும் ஒழுக்கமும் பொறையும் அன்புமாகிய நாற்பெரும் படைகளையும் செலுத்திக் கடலெனப் பெருகிய தீவினைகளாகிய தன் பகைவரை யெல்லாம் வென்று வாகை சூடித் திகழ்ந்தது என்னும் பொருள் பொதிந்த,

"கொடைப்புகழ்க் கவயம் போர்த்துக் கூரறப் படைக ளேந்தி
 விடைப்பரு வேழம் பொற்றேர் விரைசெலற் பரியாள் வாய்மை
 படைப்பருஞ் சீல நோன்பு பத்திமை யாகப் பாய்த்திக்
 கடைப்படு பாவத் தெவ்வைக் கடந்ததத் தொல்லை நாடு"

[திருநாட் - 9]

என்னும் இவ்வருமையான செய்யுள் தனது சொல்லானும் பொருளானும் அணியானும் ஆற்றவும் சிறந்த செய்யுளாகும். இதன் பொருளை விரிக்கப்புகின் கடலென விரிவதாம். இத்தகைய செய்யுள்களிலே ஆசிரியர் கச்சியப்ப முனிவரின் தனிப்பெருஞ் சிறப்பினைக் காணலாம்.

இனி, இப் புலவர் பெருமான் இந்த நாட்டுப் படலத்திலே நமக்குக் காட்டும் இன்பங் கெழுமிய காட்சிகளையும் அறமுதலிய உறுதிப் பொருள்களையுங் கண்டு களிக்கச் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினேமாகிய நமக்குப் போதிய பொழுதில்லை. இந் நாட்டின்கண் அமைந்த தணிகைமா நகரத்தின் நலனெல்லாம்,

"முழுதுணர்ந்த நித்தியர்தமக் காயினும்
      முழுவதும் சொலப்புக்கால்
 பொழுதின்றாய் விடும்"

(திருநகரம் -12)

என அம்முனிவரே கூறுவாரெனின், யாம் எம்மாத்திரம்! இனி இந்த நாட்டினின்றும் அந்த நகரத்திலும் புகுந்து ஆடு தழை தின்றாற் போன்று ஆங்காங்குச் சில கண்டு களித்து அப்பாற் செல்வேம். கச்சியப்ப முனிவரோடு யாம் அவர் அரிதிற் படைத் தளித்த இத்தணிகைமா நகரம் புகுமுன்பே அப்பெரியார் நமக்கு அந்நகரத்தைப்பற்றி ஒருசிறிய முன்னுரை வழங்குகின்றார். அஃதாவது : "நமரங்காள்! இந்த நகரத்தின் சிறப்புக்களை யான் உங்கட்கு நன்கு அறிவித்து விடுவேன் என்று முழுவதும் என்னையே நம்பிவிடாதீர்கள்! நீயிரே சென்று நும் முணர்ச்சிக் கியன்றவாறு கண்டு மகிழுமின்! உலகிலே புலவர்கள்,

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்