முகப்பு தொடக்கம்

யுணரும் வாய்ப்புப் பெற்றிருந்தால் உணரும்போதே அவனுள்ளம் மகிழ்ச்சியாற் கோடுகோ டேறிக் குதித்திருக்கும் மன் ! அங்ஙனமே சேக்குப்பிரியர் நாடகத்தில் அழகிய கருத்தொன்றனை நம் நாட்டுப் புலவர் பெருமக்கள் கண்டுழிக் கழிபேருவகை கொள்வர் என்பதில் ஐயமில்லை. எளிய சமயக் கணக்கர் மட்டுமே பிற பிற சமயக் கணக்கரை வெறுக்கும் சிறுமை யுடையோர், மற்றுப் பேரிசைப் புலமை யுடையோர் மற்றொறு மொழிப் புலவனையாதல் மற்றொரு சமயத்தைச் சார்ந்த புலவனையாதல் ஒரு சிறிதும் வெறுப்பதில்லை. இவர் தம்மின் மிக்கவர் எக்குடிப் பிறப்பினும் எந்நாட்டிற் பிறப்பினும் எந்த மொழி பேசினும் சிறிதும் வேற்றுமை கொள்ளார். இப் புலவர் பெருமக்கள் வழிபடும் தெய்வந்தானும் ஒன்றே யாம். அஃதியாதெனின் அழகெனும் அம்மாபெருந்தெய்வமேயாம். இத்தகைய பெருமை சான்ற பெரும் புலமையாளரினத்தினராகிய கச்சியப்ப முனிவரோ சேக்கிழாரடிகளோ தம்மின் மூத்தவரும் மிக்கவருமாகிய திருத்தக்க முனிவர் நெறிபற்றி நடத்தலை முனிவாரல்லர்.

இங்ஙனமாகவும் கச்சியப்ப முனிவர் "பல வித்துவான்களும் தமிழிலே புறச்சமயியாற் செய்யப்பட்ட சீவக சிந்தாமணியைப் பேரிலக்கியமாகக் கொண்டாடுதலைச் சித்தத்திலே கொண்டு அதினும் மாட்சிமை பெறத் திருத்தணிகைப் புராணத்தை மொழிபெயர்த்தருளிச் செய்தார்கள்" என வரலாறு எழுதுவோர், கச்சியப்ப முனிவரே "புறச் சமயியாற் செய்யப்பட்ட" அந்தச் சீவக சிந்தாமணி யென்னும் திருப்பாற் கடலிலே பன்னெடுங்காலம் முழுகித் திளைத்தார் என்பதற்குச் சான்று கூறுகின்ற இத்தகைய செய்யுள்களை ஓதுகின்ற பொழுது என்னினைப்பரோ அறிகின்றிலேம்.

இனி, ஆசிரியர் கச்சியப்ப முனிவர்க்கே சிறந்துரிமையுடைய திறம் ஒன்றனை இத் தணிகைப் புராணத்திலே யாண்டும் காணலாம். ஆசிரியர் கச்சியப்ப முனிவர் ஒல்லும் வாயெல்லாம் ஓவாதே தாம் மெய்ச்சமய மென்றுணர்ந்த சைவசமயக் கருத்துகளை வியத்தகு முறையிலே செல்லும் வாயெல்லாம் அழகாக உவமைகளில் வைத்து விளக்கியிருத்தல் பெரிதும் போற்றத் தகுந்ததாம். காட்சிப் பொருட்குக் கருத்துப் பொருள்களை உவமையாக எடுத்தோதுதலும் தாம் உவமையாகக் கூறி உணர்த்தக் கருதிய பொருளை உணர்தலை விட உவமையாக எடுத்த கருத்துக்களையே ஓதுபவர் உள்ளத்தில் ஊன்றி உணர்வித்தலும் இவர்க்கே கைவந்த ஒரு புலமைப் பேராற்றலாகும். இதனை விளக்குதற்குக் கம்பர் காவியத்தினின்றும் ஒன்று எடுத்துக்காட்டுதும். கம்பநாடர், நகர் நீங்கு படலத்தின்கண் இராமனுடைய அறவுரை கேட்டு இலக்குவன் சீற்றந்துறந்து நிற்பானை இராமன் உவந்து தழுவுகின்றான். இந்நிகழ்ச்சியைக் கம்பநாடர் கூறும்பொழுது,

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்