முகப்பு தொடக்கம்

இனி, கம்பநாட ரிடத்தும் இத்தகைய உயரிய உவமை அருகியே காணப்படும். இக் கச்சியப்ப முனிவர் நூலில் எங்குப் பார்த்தாலும் இத்தகைய உவமைகளே காணப்படுகின்றன. ஏன் ?

கச்சியப்ப முனிவர் இந்நூலை ஓதுபவர்க்குத் தத்துவங்களை நன்கு உணர்த்துவதே குறிக்கோளாகக் கொண்டவர். எனவே தத்துவங்களிற் பெரும்பாலன கருத்துப் பொருள்களே ஆதலால் இந்தவுவமையே அவர்க்குச் சிறந்த கருவியாய் அமைகின்றது. இனி இத் தணிகைப் புராணத்தினின்றும் எடுத்துக்காட்டாக ஒரு சில காண்பாம்.

தொண்டைநாட்டு உழவர் வித்திய விதைகள் முளைத்து நாற்றங்காலில் பின்னும் தழைத்தற்கிடம் பெறாவாய்ச் செறிந்து கிடப்பக் கண்டு அவற்றைப் பெயர்த்து அவை நன்கு செழித்தோங்கி வளரும்படி பண்படுத்தப்பட்ட கழனிகளிலே நட்டு அவற்றைக் கண்ணுங் கருத்துமாய்ப் பேணுகின்றனராம். இவ் வுழவர்க்குவமை காட்டும் வாயிலாக மூலமல முதலியவற்றால் மூடப்பட்டுக் கிடக்கின்ற உயிரினங்களை உய்வித்தற் பொருட்டு உலகத்தைப் படைத்து உயிர்களை அதன்கட் பிறப்பித்து அப் பிறப்பின் பக்குவந் தேர்ந்து அவை மேலும் ஆக்கம் எய்துதற்பொருட்டு அவ்விடத்தினின்றும் பெயர்த்து வேறிடத்துப் பிறப்பித்துப் பாதுகாக்கும் சிவபெருமானை உவமையாக்குகின்றார்.

"வித்து நிலத்தின் வெறுத்தபயிர்
     விறப்பி னீங்க விடைவாங்கிப்
 பைத்த நிலத்தி னகன்றபயி
     ரகல்வி னீங்கப் பதித்தோம்பும்
 மைத்த வுடலி னுழவர்வினை
     மாற்றி யூட்டி யினிதளிக்கும்
 சுத்த னிகர்த்தார் பணையெல்லாம்
     தோற்றத் திலங்கு முயிர்போன்ற"

(திருநாட் - 93)

எனவரும் இதன்கண் கச்சியப்ப முனிவர் உழவரியல்பு கூறுவார் போன்று நம்மனோர்க்கு இறைவனியல்பினை உணர்த்துகின்றார். இன்னும் கிழங்கினை அகழாது அதன் கொடி முதலியவற்றை உழவர் அரிந்துவிட்டனராக; பின்னும் அக்கிழங்கினின்றும் புதிய கொடி தோன்றிப் பண்டு போல மலர்ந்து வளர்வதற்கு, உயிரானது எடுத்ததோருடலின் அழிவின்கண் பிறப்பு ஒழியாமல் மீண்டும் மலத்தினின்றும் பிறப்புறுவதனை.

"எடுத்ததோ ருடலுயி ரிகவு முற்றினும்
 அடுத்தவா ணவத்தின்மீட் டாதல் போன்ம்"

(மேற்படி - 98)

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்