முகப்பு தொடக்கம்

அக்காலையில் திருமாலும் நான்முகனும் இந்திரனும் பதினெண் கணத்தவரும் பிறரும் வந்து சிவபெருமானை வணங்கிச் சென்றார்கள். வீடுபேற்றினை யடைதற்குரிய முனிவர்கள் எழுவர் மீண்டுஞ் சிவபெருமானை வணங்கி நின்றார்கள். அவர்களுடைய குறிப்பினையுணர்ந்த இறைவன், நந்தி தேவரிடத்தில் சித்தாந்த நுண்பொருள்களை ஐயந்திரிபறவுணர்ந்து மெய்யறிவு கைவரப் பெற்ற சனற் குமார முனிவரைப் பார்த்து, "இம்முனிவர்கட்கு மெய்ப் பொருளினை உரைப்பாயாக" என்று திருவாய் மலர்ந்தருளித் தாம் இறைவியோடு திருவோலக்க மண்டபத்தைவிட்டு வேறு இடத்திற்குச் சென்றார். சனற்குமார முனிவர் அம் முனிவர்கட்கு உண்மைப் பொருளை உரைத்தருளினார். பிறகு தங்கியிருந்து தவஞ் செய்தற்குரிய திருவூர்கள் பலவற்றையுங் கூறினார். இறுதியில் திருமுருகப்பெருமானுக்குச் சிறந்தனவாகிய நான்கு பதிகள், சயந்தபுரம், குமராசலம், திருவேங்கடம், சீபூரணகிரி என்னும் திருத்தணிகை என்று கூறி மேலும் உரைக்கலானார்.

திருத்தணிகைக்கு வழங்கும் பிற பெயர்கள்

பொன்னுலகத்தில் உள்ள செல்வங்களெல்லாம் தன்னிடத்திலே நிறையப் பெற்ற காரணத்தால் இவ்வூர் சீபூரணகிரி என்று பெயர் பெற்றது. அடியார்களுடைய விருப்பங்களை ஒரு கணப்பொழுதில் நிறைவேற்றுதலால் கணிகாசலம் என்று பெயர் பெற்றது. எல்லாவற்றிற்கும் மூலகாரணனாகிய சிவ பெருமானே முருகக் கடவுளை மூல காரணன் என்று தொழுதபடியால் மூலாத்திரி என்று பெயர் பெற்றது. கருங் குவளை மலர் நாள்தோறும் மலர்தலின் அல்லகாத்திரி என்று பெயர் பெற்றது. இக்காரணத்தினால் நீலோற்பலகிரி, உற்பலகிரி, கல்லாரகிரி, காவிமலை, நீலகிரி, குவளைச் சிகரி எனப் பலவாறு கூறுதலும் உண்டு. கற்பத்தின் முடிவிலும் இந்நகர் அழியாமை யால் கற்பசித் என வழங்குதலும் உண்டு. சூரபதுமனோடு செய்த போரினால் உண்டாகிய சினமும் வேடர்களோடு செய்த போரினால் உண்டாகிய சினமுந் தணியப்பெற்ற இடமாதலால் செருத்தணி எனவும் திருத்தணிகை எனவுங் கூறப்பெறும். முருகக் கடவுள் பிரணவப் பொருளைச் சிவபிரானுக்கு உரைத் தருளிய இடமாகையால் பிரணவார்த்த நகரம் எனவும், இந்திரன் வரம் பெற்ற இடமாகையால் இந்திரநகரி எனவும், நாரதர் விருப்பமுற்ற இடமாகையால் நாரதப் பிரியம் எனவும், அகோரன் என்னும் தவத்தினன் வீடு பெற்ற நகராகையால், அகோர கைவல்யப்ரதம் எனவும், கந்தக் கடவுள் வீற்றிருப்பதால் கந்தகிரி எனவும் இப்பதிக்குப் பெயர்கள் உள்ளன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்