முகப்பு தொடக்கம்

திரு நந்தி தேவரிடஞ் சென்று, "ஐயனே ! காளியின் ஊர்தியாகிய சிங்கமும் ஐயனாருடைய ஊர்தியாகிய யானையும் ஆகும் பேற்றினைப் பெறுதற் கெண்ணிப் பலநாள் தவஞ் செய்தோம். இடையே இடையூறுகள் பல ஏற்பட்டன. எங்களுடைய எண்ணத்தை இனியேனும் நிறைவேற்றுதல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர். நந்தி தேவர் அதுவரையிலும் ஊர்திகளாய் வீடு பேற்றினை நாடியிருந்த காளியின் ஊர்தியாகிய அரிமாவுக்கும் ஐயனாரின் ஊர்தியாகிய யானைக்கும் வீடுபேற்றைக் கொடுத்துச், சிங்கனையும் தாரகனையும் முறையே காளிக்கும் ஐயனார்க்கும் புதிய ஊர்திகளாக அனுப்பிவைத்தார். இவ்வாறு நால்வருடைய விருப்பமும் நிறைவேறியது.

சூரனை யழித்த ஆறுமாமுகப் பெருமானைத் தேவர்கள் வழிபட்டனர். தேவர் தலைவனாகிய இந்திரன் திருப்பரங்குன்றத்தில் தன் மகளான தெய்வயானையை முருகப்பெருமானுக்குத் திருமணஞ் செய்துவைத்தான். பிறகு முருகக் கடவுள் தெய்வானையம்மையோடு கந்தவெற்புக்குச் சென்றார். அங்குத் தெய்வானையம்மையை நிறுத்திவைத்துவிட்டுத் தாம்மட்டும் தணிகைமலைக்கு வந்து அமர்ந்தார். அசுரர்கள் ஆண்டுகொண்டிருந்த உலகங்களில் தொகுத்துவைக்கப்பட்டிருந்த அரும்பொருள்களான, காமதேனு, சிந்தாமணி முதலிய பல வளங்களையும் முருகக் கடவுள் தணிகை மலையிற் சேர்ப்பித்த காரணத்தால் தணிகைமலை சீபூரணகிரி (செல்வம் நிறைந்தமலை) என்னும் பெயரைப் பெற்றது.

நான்முகன் அருள்பெறுதல்

ஒரு காலத்தில் நான்முகன் கலைமகளோடு திருத்தணிகைக்கு வந்து முருகக் கடவுளைப் பூசித்து வழிபட்டான். முருகக் கடவுள் நான்முகனுக்கு முன் எழுந்தருளி, "உனக்கு வேண்டிய மேன்மை யாது ?" என்று உசாவினார். நான்முகன் அறுமுகப்பெருமானைப் பார்த்து, "எங்களுடைய உலகத்தில் இருந்த செல்வங்களையெல்லாம் சூரபதுமன் தன்னுடைய நாட்டிற்குக் கொண்டுபோய் வைத்திருந்தான். அவைகளெல்லாம் இப்பொழுது இத் தணிகைமலையில் உள்ளன. வழிபாட்டினையுடைய நின் அடியேனுக்கு நின் தந்தையாகிய சிவபெருமான் முன் காலத்தில் வழங்கியருளிய செல்வங்களை யெல்லாம் மீளவும் எனக்குக் கொடுத்தருளுதல்வேண்டும்; கலைமகள் ஈண்டுச் சிவக்குறியினை நிறுத்தி வழிபாடு செய்தாளாகலின் என்னுடைய பெயரோடு இங்கு விளங்குகின்ற புனிதநீர் கலைமகள் பெயரோடு விளங்கச் செய்தல்வேண்டும். ஈண்டுள்ள சிவக்குறியும் கலைமகள் பெயரினைப் பெறுதல் வேண்டும். தேவரீர் அடியேனுக்கு அருள்புரிகின்ற இம் மார்கழித் திங்களில் திருவாதிரை நாளோடு வரும் முழுத்திங்களில் இப் புனிதநீரில் நீராடிச்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்