முகப்பு தொடக்கம்

இல்லத்தை விட்டு வெளியே செல்லற்க" என்று கூறி இல்லத்திலேயே இருக்கச் செய்தார்கள். மகளை மலைத்தெய்வந் தீண்டியிருக்கிறதென்று வெறியாட்டு நடத்தினார்கள். அப்பொழுது வேலவன் வெறியாடுவோன்மீது தோன்றி, "இவள் தனித்தவளாயிருந்த புனத்தினில் தொட்டனம். எனதுள்ளம் மகிழுமாறு பெருஞ் சிறப்புச் செய்வீர்களாயின் இக்குறை நீங்கும்" என்று குறிப்பாகக் கூறியருளினான். செவிலித்தாய் சிறப்புச் செய்வதாக உறுதிமொழி உரைத்தாள்.

முருகப்பெருமான் வள்ளியம்மையைக் களவாக வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றார். செய்தியை உணர்ந்த வேடர்கள் தொடர்ந்து வந்து போர்செய்து அம்பினைச் செலுத்தினார்கள். முருகப்பெருமானுடைய கொடியாக நின்ற கோழி நிமிர்ந்தெழுந்து கொக்கரித்தது. இடியைப்போன்ற அவ்வொலியின் அதிர்ச்சியால் நம்பிராசனும் அவனுடைய மக்களும் உறவினர்களும் பிறரும் மாண்டு வீழ்ந்தார்கள். பிறகு முருகப்பெருமானுடைய அருளால் நம்பிராசனும் அவனைச் சேர்ந்தவர்களும் உயிர்பெற்றனர். நம்பிராசன் வள்ளியம்மையைத் திருமணஞ் செய்துகொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். முருகப்பெருமான் எல்லோரையும் தணிகைமலைக்கு வருமாறு கூறிவிட்டுத் தாம் வள்ளியம்மையோடு தணிகைமலையை அடைந்தார்.

வள்ளியம்மை திருமணம்

முருகக் கடவுள் வள்ளியம்மையோடு திருத்தணிகையை அடைந்தவுடன் குமாரலிங்கத்தில் இருந்து சிவபெருமான் உமாதேவியாரோடு வெளிப்பட்டுத் தோன்றினார். முருகக் கடவுள் தாய்தந்தையரைப் பணிந்தார். சிவபெருமான் முருகவேளைத் தழுவிக்கொண்டு, "மைந்தனே ! உன்னுடைய திருமணத்தைக் காண்பதற்காக வந்தோம்" என்று கூறினார். அங்கிருந்த நாரத முனிவர், "இம்மாசித் திங்களில் பூசவிண்மீன் நாள் திருமணத்திற்கு ஏற்றதாகும்" என்று கூறினார். திருமணத்தை நடத்தி வைக்கும் தலைவராக ஆபத்சகாய விநாயகமூர்த்தி அமர்ந்தருளினார். அவர் தம்முடைய தம்பியைப் பார்த்துக், "கந்தமலையில் உள்ள தேவப் படைகளையெல்லாம் இங்கு வரவழைப்பாயாக" என்று கூறினார். முருகப்பெருமான் கந்தமலைக்கு வீரவாகு தேவரை அனுப்பினார். திருமணமண்டபம் தெய்வத் தச்சனால் மிகு புதுமையானதாக அமைக்கப்பெற்றது. தேவ கோடிகள் திருத்தணிகைக்கு வந்துசேர்ந்தன. முனிவர்களுடைய கூட்டம் தணிகைமலையை நாடி வந்தன. தேவயானை அம்மையும் வந்துசேர்ந்தாள். அவ்வம்மையை முருகப்பெருமான் தமது இடப்பாகத்தில் அமர்த்தியருளினர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்