ஒருங்கே அயர்வுற்றிருப்பது கண்ட சீசய்யா
துரை, ஆச்சரிய
முற்றவராய்
அவ்வுத்தியோகஸ்தர்களின் அயர்வுக்குக் காரணம்யாதென்று
விசாரித்தனர். அப்பொழுது,
நந்தனார் என்னும் ஓர் இந்திய பக்தர் சரித்திரத்தை
நாகபட்டணத்தில் ஒரு சிறந்த
வித்வான் அழகாய் எடுத்துப் பிரசங்கித்ததாகவும்,
அதனை இரவெல்லாம் கண்விழித்துக்
கேட்டதால் உறக்கமின்றித் தமது உத்தியோகஸ்தர்கள்
அயர்வுற்றிருக்கின்றனர் என்றும்
அறியலானார். காததூரத்திலுள்ள நாகை சென்று
கண்விழித்துக் கேட்கும்படியான
அவ்வடியார் சரிதம் எவ்வளவு அற்புதமானதோ,
அதைப் பிரசங்கிக்கும் கல்விமானது
சொல்வன்மை எத்தகைத்தோ அதனை அறிய வேண்டுமென்றவிருப்பினராய்ச்
சீசய்யாதுரை, காரைக்காலுக்கு அந்தப் பிரசங்கியாரை
வரவழைத்து அப் பக்தர்
சரிதத்தைப் பிரசங்கிக்கச்
செய்து கேட்கவேண்டுமென்று விரும்பி, அதற்கான
முயற்சிகளைச்
செய்தார்.
பாரதியார் காரைக்காலுக்குச்
சென்று நந்தனார் சரித்திரத்தைப் பிரசங்கிக்க
உடன்பட்டார். ஓர் இந்திய கனவான் வீட்டில்
நந்தனார் சரித்திரம், மூன்று நாள்
பிரசங்கிக்கப் பட்டது. சீசய்யாதுரை அதை முற்றும்கேட்டு மெச்சியதன்றி,
பாரதியாரை
அணுகி, “இச்சரித்திரம் மிகவும் அற்புதமாயுள்ளது.
இதனைத்தங்கள் வாக்கினின்றும்
இருந்தவண்ணமே அச்சிற் பதித்துப் புத்தக ரூபமாய்
வெளியிட்டால் உலகத்தாருக்கு
மிகவும் உபகாரமாகும். அதற்குத் தாங்கள் உத்தரவளித்தால்
நான் செய்கிறேன்” என்றார்.
உலக நன்மையிலேயே மிகவும்
கருத்துள்ள பாரதியார் உவப்புடன் அதற்கு ஒப்பியதோடு
தம் கையால் எழுதிய அச்சரித்திரக் கீர்த்தனையை
அவரிடம் கொடுத்துவிட்டார்.
|