அமைந்த நூல் இது. மோனை, எதுகை முதலிய தொடைகளும், சந்தமும் அந்தமும்
வாய்ந்து, ஆற்றொழுக்குப் போலப் பொருள் ஒழுகுமாறு ஆசிரியர்
அமைத்துள்ளபான்ைமை வியக்கத்தக்கது. உயர்நிலைப் பள்ளி மாணவர்க்குரிய செய்யுட்
பாடப் பகுதியில் இந் நூற் கவிகள் சேர்க்கத் தக்கனவென ஆசிரியர்கள் பேசி அன்றுமுத
லின்றுவரை சேர்த்துக் கற்பித்து வருவது இதன் பெருமையைப் புலப்படுத்தும். இந்
நூலை உரைவகுத்தும் உரையின்றியும் அச்சிட்டுப் பலர் போற்றி வருவதையும் நாம்
அறிந்தனம். கழகவாயிலாக வெளிவரின் நலம் பயக்குமெனத் தமிழறிஞர் கருதுவதையறிந்து
இந் நூலை இந்நாள் வெளியிடத் துணிந்தனம்.

இந்நூற்குச் சொற்பொருள் விளக்கவுரை கழகப் புலவராலியற்றப்பட்டன. செய்யுளிற்
சீர்பிரித்துச் சந்தி சில பிரிக்க வேண்டியவற்றைப் பிரித்துக் கவியைப் படிக்கும் போதே
எளிதிற் பொருள் புலப்படுமாறு பதித்திருப்பது காண்க. இலக்கணக் குறிப்பு, வரலாற்றுக்
குறிப்பு வேண்டுமளவே குறிக்கப்பட்டன. விரிவுரையும் நுண்ணிய இலக்கணக் குறிப்பும்
இந் நூலுக்கு வேண்டா என விடுக்கப்பட்டன. அருஞ் சொற்பொருள் அவ்வக்கவியின்
உரைக்கு அடியிற் குறித்துள்ளமையால் அருஞ்சொல்லகர வரிசை மட்டும்
சேர்த்திருக்கின்றனம். பெயர் விளக்கம் அகரவரிசையாக வரையப்பட்டு இந் நூலி்ன்கண்
இணைத்திருக்கின்றனம். அத்தியாயம் மூன்றிலுள்ள வரலாறு சுருக்கமாகவும் தெளிவாகவும்
வரைந்து முற்பக்கம் பொருத்தினம். இந் நூல் புதுமையாகக் கழக வாயிலாக இப்போதுதான்
முதலில் வெளிப்படுகின்றது.

தமிழன்பர் பலரும் இந்நூலினை வாங்கிக் கற்றும் கற்பித்தும் நம் மொழிப்
பெருமையும் சொற்சுவை பொருட்சுவையும் உணர்ந்தும் உணர்வித்தும் இன்புற்று மக்கட்
பண்பிற் சிறந்து வாழுமாறு விழைகின்றனம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.