ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்'
என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை,
நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல
தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய
காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு.
கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும்
பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில்
சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான
நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள்
தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து
ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும்,
பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை
அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம்
அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும்
ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி
யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய
நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும்,
கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று
விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக்
கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின்
சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய
சொற்றொடர்களாலும், கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும்,
ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும்
கருத்துப்பற்றியேயாகும். மிக்க இளம்பருவத்தினராயிருக்கும்பொழுதே, பிள்ளைகளின்
மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும்,
பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின்
மாண்பு அளவிடற்பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும்
முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை
தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு
மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக
எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம். |