இதை
நீ பார்க்கவில்லையென்றால்
எனக்கு
நிம்மதி இருக்காது.
உன்னைச்
சந்தித்தது முதல் பாலைப்பாடல்
என்
செவிப்பறையைத் தாக்கும் இந்த
வினாடி வரை, நான்
உன்னோடு உனக்குத்
தெரிந்தும்
தெரியாமலும் அனுபவித்த
தவிப்புக்களையும்
தாபங்களையும் இதில்
இறக்கி வைத்துள்ளேன்.
என்
சத்தியமே!
எனக்கு
ஓவியம் எழுதத் தெரியாது.
தெரிந்
திருந்தால் உன்னையும்
உன்னைச் சுற்றி
வட்டமிட்ட என் உள்ளுணர்வுகளையும்
வண்ணங்களில்
வழங்கியிருப்பேன்.
அதற்காக
எந்த ஓவியனின் கையையும்
நம்பியிருக்க விரும்பவில்லை;
நீயும் விரும்ப மாட்டாய்.
உன்
மனம் எனக்குப் புரியுமே..
என் மனமும் உனக்குப் புரியுமே.
என்னை
நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்
வேறு யார் புரிந்து கொள்ளக்கூடும்?
என்னை
நீ புரிந்து கொள்ளவில்லையென்றால்
வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன?
என்
அந்தரங்கமே!
இதோ,
என் சொல்லோவியம்...
நம் உள்ளப் புணர்ச்சிக்குப் பிறந்த
உயிரோவியம்... உன் காலடியில் வைக்கிறேன்.
விசுவாமித்திரனைப்
போல்
வேண்டாம் என்று சொல்லி விடாதே.
|