சிரிக்கும் பூக்கள்

அணிந்துரை

உயர்திரு சிலம்பொலி சு. செல்லப்பன்,
எம்.ஏ., பி.டி., பி.எல். அவர்கள் 

குழந்தை இலக்கியம்-புதுவரவு

குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய
வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க்
குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் ‘பிசி’ என்னும் ஓர்
இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.

‘பிசி’ என்பது விடுகதை. “விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க
காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்களிருந்தன” என்பர் ஆய்வாளர்.
விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை
குழந்தைகட்கே உரியன என்று கூற முடியாது.