காட்டவே மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைக்
கூறினேன். சிரிக்கும் பூக்கள் - இந்தப் பெயரை இந்நூலுக்கு எட்டு
ஆண்டுகளுக்கு முன்பு சூட்டியவர், என் ஆருயிர் நண்பர், இன்று
அமரராகிவிட்ட ரத்னம் அவர்கள்தான். நான் எந்த நன்முயற்சியில்
ஈடுபட்டாலும் பெயருக்கோ புகழுக்கோ ஆசைப்படாமல் முப்பது
ஆண்டுகளுக்குமேல் எனக்குத் தொடர்ந்து துணை நின்றவர் அவர். அவரே
ஒரு நல்ல குழந்தை எழுத்தாளர். தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்க
வேண்டுமென அரும்பாடுபட்டவர், நான் எழுதிய பாடல்களில் சுமார் நூறு பாடல்களை இத்தொகுப்பில்
சேர்ப்பதற்காக நானும் நண்பர் ரத்னமும் தேர்ந்தெடுத்து அவற்றிற்குத்
தமிழகத்தின் சிறந்த ஓவியர்களைக் கொண்டு படங்கள் வரைய ஏற்பாடு
செய்தோம். புத்தகத்தை அச்சுக்குக் கொடுக்கவிருந்த சமயத்தில், நான்
பணியாற்றிய இந்தியன் வங்கி என்னைச் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு
மாற்றியது. அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களிடம் நான்
முறையிட்டிருந்தால், அவர்கள் என்னைச் சென்னையிலே தொடர்ந்து
பணிபுரிய அனுமதித்திருக்கக் கூடும். ஆயினும், நான் வங்கியில் சேர்ந்தநாள்
முதலாக என்னை வேறு எந்த ஊருக்கும் மாற்றாமல், நான் என் இலக்கிய
முயற்சிகளைச் சென்னையில் தொடரவும், இலக்கிய உலகிற்கு ஓரளவு
அறிமுகமாகவும் வாய்ப்பளித்ததை நினைத்து, “இனியும்தொடர்ந்து இங்கே
இருக்க ஆசைப்படுவது சரியன்று” எனக்கருதி, காரைக்குடிக்குச் சென்றேன். |