தொடக்கம்

தமிழினத்தின்மீதும் உள்ள பெரு வேட்கையால் வேறுயாரும் செய்யத் துணியாத இந்தப் பணியையும் தலைமேற்கொண்டு செய்யத் துணிந்தோம். தமிழ்கூறும் நல்லுலகம் எங்களின் இந்த அரும்பெரும் பணிக்குக் கை கொடுத்து உதவும் என்று நம்புகிறோம். இராவ்சாகிப் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தஞ்சாவூரில் வளமாக வாழ்ந்தவர். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் துறைபோகிய இவர் சித்த மருத்துவம், சிற்பம், சோதிடம், வேளாண்மை, இசை முதலான துறைகளிலும் வல்லுநராகத் திகழ்ந்துள்ளார், இன்றும் அவருடைய பிறங்கடைகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் கண்டு பேசிய போது, இந்த முயற்சி பற்றிப் பெரிதும் பெருமைப் பட்டுக்கொண்டார்கள். இரண்டாவது தொகுதி தமிழ் இசைபற்றியது; அதனை வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். நாம் விரும்பினால் அதனையும் வெளியிட அனுமதியளிப்பதாகக் கூறினார்கள். திட்டவட்டமாக இந்த நூலுக்குப் பிறகு அதனை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறோம்.

இவ்வொப்பற்ற இசை நூலைத் தஞ்சைத் திருநகரில் எட்டாவது உலகத்தமிழ் மாநாடு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அவர்களுடைய தலைமையில் நடைபெறும் இவ்வேளையில் இந்நூலை வெளியிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து உதவிய மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்த பாசமிகு அண்ணன் எஸ்.டி.எஸ். அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு ஆவணக் காப்பக ஆணையாளரும் நூலகரும் இந்த அரிய நூலை வெளியிடுவதற்கு இசைவு அளித்ததோடு வெளியிடுவதிலும் எடுத்துக்கொண்ட அக்கறை பெரிது. அவர்களுக்கு எமது பதிப்பகத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூல் மறுபதிப்புச் செய்யப்படுவதன் தேவைபற்றி மொழி, இனப்பற்றுள்ள தமிழ்ச் சான்றோர் பலரும் வற்புறுத்திக் கூறினர். இந்த நூல் வெளிவரக் காரணமாயிருந்தவர் பரோடா மன்னர். பரோடாவுக்கும், இசைக்கும் உள்ள தொடர்பினாலோ என்னவோ பரோடா வங்கி இந்த நூலை வெளியிட நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தியது. அந்நிறுவனத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நூல் அச்சிடத் தேவையான தாள்களை விசாலாட்சி பேப்பர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. முத்துராமன் அவர்கள் கேட்டவுடனேயே வழங்கி உதவினார்கள். இன்னும் பலவகையிலும் உதவிக்கொண்டிருக்கிறார்கள். எதையும் எதிர்பாராமல் செய்த இந்த உதவியை என்னென்பது !

இந்த நூலை இவ்வளவு சிறப்பாக வெளியிடுகிறோம் என்றால் எதற்கும் நானிருக்கிறேன் என்று கூறி மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்டுப் புத்தகமாக்கிக் கொடுத்த எஸ்.எஸ். பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. செல்வராசன் அவர்கள் தான் இதற்குக் காரணம். அவர்களை என்றும் மறக்கவியலாது. அவரது அச்சகப் பணியாளர்கள் இராப்பகல் எனப்பார்க்காது சிறப்பாக அச்சிட்டு உரிய காலத்தில் செய்து முடித்தார்கள். அந்த அச்சக ஊழியர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்: சிறந்த முறையில் அட்டைப்படம் அச்சிட்டு வழங்கிய இராயப்பேட்டை அச்சுத் தொழிற் கூட்டுறவு அச்சகம் திருவாளர்கள் முகமது, மேகநாதன் ஆகியோருக்கும் எமது நன்றி.

சென்னை - 5

பதிப்பகத்தார்

27 - 12 - 1994


முன்பக்கம்