வேண்டுகோள்
இவர்கள் அனைவரையும் சந்தித்து இப் பணியில் இறங்குமாறு
தூண்டுவதற்குத் தமிழ் இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்புக் கூட்டம் வாய்ப்பளித்தது.
இவர்களில் பெரும்பாலோரை உறுப்பினராகவும் என்னைச் செயலாளராகவும் கொண்ட நாட்டுப் பாடல்
ஆராய்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவின் முயற்சியாலும், பெரு மன்றத்தின் செயலாளர்
தோழர் தா. பாண்டியன் அவர்கள் உதவியாலும், பாடல்கள் சேகரிக்கும் வேலை கடந்த இரண்டு
ஆண்டுகளாக நடைபெற்றது. தோழர் ப. ஜீவானந்தம் இம்முயற்சிக்கு அளித்த உதவி மிகப் பெரிது.
பல்வேறு வகையான பாடல்களைக் கேட்டு நான் இந்த நண்பர்களைத் தொந்தரவு செய்தபோதும் அவர்கள் முகம் கோணாமல் மகிழ்ச்சியோடும் இது ஓர் கலைப்பணி என்ற உற்சாகத்தோடும் பாடல்களை
அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ‘தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்’எனும்
நூல் அநேகமாக போத்தையா ஒருவரின் தனி முயற்சியினால்தான் உருவாயிற்று. ஆனால் இது அவ்வாறில்லாமல்
ஒரு குழுவினருடைய முயற்சியினாலும், அவர்களுக்கு உதவி புரிந்த மற்ற கலை அன்பர்களது உதவியாலும்
முழு வடிவம் பெறுகின்றது.
இது மிகப் பெரிய வெற்றியாயினும், நாம் திருப்தியடைவதற்கில்லை.
தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டுப் பாடல் திரட்டை
அம்மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்களது உதவியோடு வெளியிட்டால்தான் நாம் திருப்தியடைய
முடியும். இக் குழு அம் முயற்சியை மேற்கொள்ளும். அம் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாடு
முழுவதும் பரவிக் கிடக்கும், கலை மன்றங்களையும் கலைத் தொண்டர்களையும் நான் மிகவும் பணிவாக
வேண்டிக் கொள்கிறேன்.
நா. வானமாமலை
|