வருணன்

மனித உழைப்பில் குறைவி்ல்லை. உழுதான், கடலை விதைத்தான். மழை வருவதுபோன்ற அறிகுறி வானத்தில் தோன்றியது. ஆனால், திடீரென்று வானம் வெளிறிற்று. வந்த மழை பெய்யாது போய்விட்டது. அவன் மனம் ஏங்குகிறது. இனி அவனால் என்ன செய்ய முடியும்? நினைத்த நேரத்தில் மழை பெய்யவைக்கக்கூடிய கற்பரசி அவன் பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து, வருணன் செயலை நினைத்து வருந்துகிறான். அவளால் என்ன செய்ய முடியும்? விஞ்ஞானம் இன்னும் வருணனைப் பணிய வைக்கவில்லையல்லவா? இத் துறையில் முயற்சி நடப்பதையே நமது உழவன் அறிந்திருக்க மாட்டானே!

  வாகை மரத்துப் புஞ்சை
வட்டாரச் சோளப் புஞ்சை
தங்கம் விளையும் புஞ்சை
தரிசாக் கிடக்குதடி.
காட்டை உழுது போட்டேன்,
கடலை போடப் பட்டம் பார்த்தேன்,
வந்த மழை போகுதில்ல
வருணனே உனது செயல்.

வட்டார வழக்கு: போகுதில்ல-போகிறதல்லவா?

சேகரித்தவர்:
கார்க்கி

இடம்:
சிவகிரி வட்டாரம்,
நெல்லைமாவட்டம்.