ஆசாரிக்கு என்ன தந்தார்?

தொட்டிலின் மேல் பகுதியில் அழகான பறவை உருவங்களைத் தொங்க விடுவார்கள். தொட்டில் ஆடும்பொழுது அப்பறவைகளும் அசைந்தாடும். வண்ணத் துணியில் பஞ்சு அல்லது உமி அடைத்து அழகிய கிளிப் பொம்மைகள் செய்யும் பலதொழில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். முதன் முதலில் குழந்தையைத் தொட்டிலிடும் தினத்தன்று ஊர்த்தச்சர் சிற்ப வேலைப்பாடமைந்த தொட்டில் ஒன்றைக் கொண்டுவந்து கொடுப்பார். தையல்காரன் வண்ணத்துணிகளால் கிளி செய்து கொடுப்பான். இக் கலைஞர்களுக்குப் பெண்ணின் உற்றார் உறவினர்கள் பரிசுகள் கொடுத்தனுப்புவார்கள். தமிழ்நாட்டில் இத்தகைய கலைகள் இப்பொழுது அழிந்து வருகின்றன. அழகற்ற இரப்பர் பொம்மைகளையும், கலைச்சிறப்பற்ற இரும்புத் தொட்டில்களையும் நம் வீடுகளில் வாங்கி வைக்கிறோம். தமிழரின் அழகுணர்ச்சி குறைந்து விட்டதைத்தான் இது காட்டுகிறது. இப்பாடலில், மாமன் செய்த வரிசைகளைத் தாய் மகிழ்ச்சியோடு புகழ்ந்து கூறுகிறாள்.

  அஞ்சு கிளி ரெண்டெழுதி
அம்மா எனும் பேரெழுதி
கொஞ்சு கிளி ரெண்டெழுதி
கொண்டு வந்தார் ஆசாரி
கொண்டு வந்த ஆசாரிக்கு
என்ன தந்தார் ஏது தந்தார்?
வெளையாடப் போன பக்கம்
வெயில் படும் என்று சொல்லி
வெள்ளியாலே கால் நிறுத்தி
வெத்திலையால் பந்தலிட்டு
பொன்னாலே கால் நிறுத்தி
பூவாலே பந்தலிட்டு
கமுகாலே கால் நிறுத்தி
கரும்பாலே பந்தலிட்டு
தங்கத்தால் கால் நிறுத்தி
தாமரையால் பந்தலிட்டு-அதிலே
பிள்ளை விளையாடுமென்று
அறிக்கை உட்டார் உன் மாமன்
பாட்டனார் எல்லையிலே
பட்டு வந்து விக்கி தென்று
பட்டு விப்பார் செட்டி மவன்
பணம் கொடுப்பார் உன் மாமன்
முப்பாட்டான் எல்லையிலே
முத்து வந்து விக்கி தென்று
முத்து விப்பார் செட்டி மவன்
முடி கவுப்பார் உன் மாமன்
 

வட்டார வழக்கு: உட்டார்-விட்டார்; விக்கிது-விற்கிறது; விப்பார்-விற்பார்; முடி கவுப்பார்-முடி கவிழ்ப்பார்.

உதவியவர்: புலவர் ராமராசன்
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

இடம்:
வேலூர்,
சேலம் மாவட்டம்.